தமிழகத்தில் திமுக அரசு அமலுக்கு கொண்டுவந்த புதுமைப்பெண் திட்டத்தை அதிமுகவின் ஒரே எம்பியான ஓ.பி.ரவீந்திரநாத் பாராட்டியுள்ளார்.
ஆசிரியர் தினத்தில் தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்ற கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது.
முதல்வர் ஸ்டாலின், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் இந்த திட்டம் அமலுக்கு வந்தது.
இதன் தொடக்கவிழாவில் பேசிய கெஜ்ரிவால் புதுமை பெண் திட்டத்தை வெகுவாக பாராட்டினார். ”வருங்காலத்தில் தமிழகத்தில் உள்ளவர்கள் மட்டுமின்றி, நாட்டில் உள்ள அனைத்து பெண்களின் வாழ்விலும் ‘புதுமைப்பெண்’ திட்டம் புரட்சியை ஏற்படுத்தும்.
மாணவிகள் படிப்பை தடையின்றி தொடர ‘புதுமைப்பெண்’ திட்டம் உதவியாக இருக்கும். பெண்களின் திருமண வயது வரும் முன்னரே திருமணம் செய்யும் நிலையும் கணிசமாக குறையும் என்றார். அதேபோல் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு கட்சியினரும் இத்திட்டத்தை வரவேற்று கருத்து தெரிவித்தனர்.

ரூ.1000 வழங்கும் திட்டத்தை வரவேற்கிறேன்!
எனினும் இதுகுறித்து அதிமுக தரப்பில் எந்தவித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில், புதுமைப்பெண் திட்டத்தை அதிமுகவின் ஒரே எம்பியான ஓ.பி.ரவீந்திரநாத் பாராட்டியுள்ளார்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு திங்கள்கிழமை ஓ.பி.ரவீந்திரநாத் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார்.
ரோப்கார் மூலம் மலைக்கு வந்து சாமியை தரிசித்து விட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு பெண்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியது.
பெண் கல்விக்காக பல்வேறு திட்டங்களை அரசு வழங்கியது. இப்போது இருக்கும் திமுக அரசு 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இது மிக நல்ல திட்டம். இந்த திட்டத்தை நான் வரவேற்கிறேன்.
முன்னதாக அதிமுக ஆட்சியில் பல திட்டங்களை கொண்டு வந்தோம். பெண்களுக்கு சைக்கிள் வழங்கினோம். மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கினோம். அதேபோல் இந்த 1000 ரூபாய் வழங்கும் திட்டமும் நல்ல திட்டம்தான்” என்று கூறினார்.
அதிமுக தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் மாறி மாறி நீதிமன்ற படியேறி வருகின்றனர்.
இதில் திமுகவுடன் கூட்டுசேர்ந்து தான் அதிமுகவை அழிக்க ஓபிஎஸ் சதி செய்து வருகிறார் என்று இபிஎஸ் தரப்பினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது ஓபிஎஸ் மகனும், அதிமுக எம்பியுமான ரவீந்திரநாத் திமுக அரசின் நலத்திட்டம் ஒன்றை திடீரென பாராட்டி இருப்பது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
அரசுப்பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் : புதுமை பெண் திட்ட விழாவில் கெஜ்ரிவால்