சென்னை சைதாப்பேட்டையில் இருந்து ஆளுநர் மாளிகை நோக்கி அதிமுகவினர் பேரணியாக சென்று கொண்டிருப்பதால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மரக்காணம் மற்றும் செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் அருந்தி 22 பேர் உயிரிழந்துள்ளனர். இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கள்ளச்சாராய மரணங்கள், போலி மதுபான உயிரிழப்புகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் குறித்து ஆளுநரிடம் மனு அளிக்க ஆளுநர் மாளிகை வரை பேரணியாக செல்வதாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து சைதாப்பேட்டையில் இருந்து ஆளுநர் மாளிகை வரை நடைபெறவுள்ள இந்த பேரணியில் கலந்து கொள்வதற்காக இன்று (மே 22) காலை முதல் அதிமுகவினர் சைதாப்பேட்டையில் குவிந்தனர்.
இதனால் சைதாப்பேட்டை சாலைகளில் ஏற்பட்டுள்ள கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். கார், பஸ், இருச்சக்கர வாகனங்கள் என அனைத்து வாகனங்களும் சாலையில் அணிவகுத்து நின்று கொண்டிருக்கின்றன.
இதனையடுத்து காலை 11.45 மணியளவில் எடப்பாடி பழனிசாமி பேரணி தொடங்கவிருக்கும் இடத்திற்கு வருகை தந்தார். அப்போது தொண்டர்கள், ’கழக பொதுச்செயலாளர் வாழ்க’ என்றும் திமுக அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.
தொடர்ந்து 12 மணியளவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடங்கிய பேரணி நடைபெற்று வருகிறது. பேரணியில் கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதால் ஏராளமான போலீசார் நிகழ்விடத்தில் குவிந்துள்ளனர்.
மோனிஷா
கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!