பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பட்ட மோதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வரும் நவம்பர் 8 ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக அதிமுக அறிவித்துள்ளது.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி நடைபெற்ற கல் குவாரி ஏல விண்ணப்பத்தின் போது திமுகவினர் மற்றும் பாஜகவினர் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் கைகலப்பாக மாறியது. இதில் சுரங்கத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் சூறையாடப்பட்டது.
இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அமைச்சர் சிவசங்கரின் உதவியாளர் உட்பட 10 பேர் மீது கொலை முயற்சி, பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்ததை அடுத்து 12 பேரை பெரம்பலூர் போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அதிமுக அறிவித்துள்ளது.
இது குறித்து இன்று (நவம்பர் 2) அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அக்டோபர் 30 அன்று கல்குவாரிகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகள் பெறப்பட்ட நிகழ்வில், திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என்று சுமார் 300 குண்டர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்து கல்குவாரி டெண்டரை தங்களுக்கே தர வேண்டும் என்றும், ஆளும் கட்சியினரைத் தவிர வேறு யாரிடமும் ஒப்பந்தப் புள்ளி பெறக்கூடாது என்றும் மிரட்டி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திமுகவினரின் இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த கனிம வளத்துறை உதவி இயக்குநர் மற்றும் அவருடைய உதவியாளர் ஆகியோரையும் தாக்கியுள்ளனர் என்று ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.
இந்த வன்முறையைத் தடுக்க வந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர், உதவி ஆய்வாளர் உள்ளிட்ட காவலர்களையும் தி.மு.க. குண்டர்கள் தாக்கியதாகவும், ஒப்பந்தப் புள்ளி வழங்க வந்தவர்களை அடித்து விரட்டிய திமுகவினரின் அராஜகங்கள் புகைப்படத்துடன் ஊடகங்களில் வெளிவந்துள்ளன. திமுகவினரின் இத்தகைய வன்முறை செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கல்குவாரி டெண்டர் சம்பந்தமாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் காவல் துறையினர் மீதே தாக்குதல் நடத்திய திமுகவினர் மீது கண்துடைப்பு நடவடிக்கை எடுக்காமல், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திமுகவினரின் பல்வேறு மக்கள் விரோதச் செயல்களை கண்டும் காணாமல் இருந்து வரும் திமுக அரசைக் கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பெரம்பலூர் மாவட்டத்தின் சார்பில், நவம்பர் 8 ஆம் தேதி காலை 10 மணியளவில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ப. மோகன் தலைமையிலும்; கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வரகூர் அ.அருணாசலம், பெரம்பலூர் மாவட்டக் கழகச் செயலாளர் இளம்பை இரா. தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களும், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு அமைப்புகளின் முன்னாள் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டும்.
திமுகவினரின் அராஜக செயலைக் கண்டித்தும், திமுக அரசின் நிர்வாக சீர்கேடுகளைக் கண்டித்தும் நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்கள் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
மகளிர் உரிமை தொகை மேல்முறையீடு : விரைவில் குறுஞ்செய்தி!
ODI World Cup 2023: அரையிறுதிக்கு செல்லுமா இந்தியா? மற்ற அணிகளுக்கான வாய்ப்பு என்ன?