தமிழக சட்டமன்றத்தில் ஜனநாயக படுகொலை நடப்பதாக அதிமுக எம்எல்ஏக்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று (அக்டோபர் 19)உணர்வோடு ஒருநாள் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினர். அதை முறியடிக்க போலீஸார் போராடியதாக சொல்கிறார்கள் அதிமுக எம்எல்ஏக்கள்.
மூன்று நாள் (அக்டோபர் 17-19) நடந்த தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்கட்சி துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்காததைக் கண்டித்து நேற்று (அக்டோபர் 18) முன்தினம் சட்டமன்றத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் சடுகுடு ஆட்டம் விளையாடினர்.
இந்த நிலையில், நேற்று (அக்டோபர் 19) நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத் தொடருக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் செல்லாமல் சட்டமன்றத்தில் நடைபெறும் ஜனநாயக படுகொலையைக் கண்டித்து வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் போராட்டத்தில் அமர்ந்தனர்.
அதிமுக எம்எல்ஏக்கள் உண்ணாவிரதம் போராட்டம் அறிவித்ததும், ’அதிமுக எம்எல்ஏக்கள் உண்ணாவிரதம் போராட்டத்திற்கு அனுமதி கொடுக்க வேண்டாம். மீறி உட்காராத அளவுக்கும் கூட்டம் கூடாத வகையிலும் தடுத்து விடுங்கள்’ என்று உளவுத்துறை அவசர ரிப்போர்ட் கொடுத்தது.
இதையடுத்து, சென்னை சிட்டி போலீஸ் அதிகாரிகளும் அதிமுக தலைமையிடம் பேசி வந்தனர். ஆனால் அதிமுக பிரமுகர்கள் ”சார், நாங்கள் போலீஸுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கிறோம். முன்னாள் முதல்வர் வருகிறார். அதனால் சும்மா பத்து நிமிடம் உட்கார்ந்துவிட்டு ஒரு போட்டோ எடுத்துவிட்டு கலைந்து விடுகிறோம் அல்லது நாங்களே கைதாகி விடுகிறோம்” என்றதும், போலீஸ் அதிகாரிகளும் “சார் பிரச்சினைகள் இருக்காது; பத்து நிமிடத்தில் முடிந்துவிடும்” என்று தலைமைக்கு தகவல் தெரிவித்தனர்,
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினமே உண்ணாவிரதம் போராட்டத்தை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்று ஸ்கெட்ச் போட்டு, ”அனைத்து எம்எல்ஏக்களும் சுகர் உள்ளவர்கள் பிபி உள்ளவர்கள் காலையிலே தயாராகி வந்துவிடுங்கள்” என்று உத்தரவு போட்டார்.
கூடவே கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளையும் அழைத்தார்.
திட்டமிட்டப்படி கருப்பு நிற உடை அணிந்து வள்ளுவர் கோட்டத்தில் அமர்ந்தனர். சரியாக காலை 9.00 மணிக்கு எடப்பாடி பழனிசாமி வந்தார். அவர் வந்ததும், அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.
முன்கூட்டியே உண்ணாவிரதம் போராட்டத்தை தடுக்க தவறிய சிட்டி போலீஸ் அதிகாரிகள் ”எடப்பாடி பழனிசாமியிடம் கையெடுத்து கும்பிட்டு உண்ணாவிரதம் போராட்டத்தில் உட்கார வேண்டாம்” எனப் பேசி போராடி வந்தனர்.
அதிமுக போராட்டம் செய்தி மீடியாக்களில் முதலிடம் பிடித்தது, நியூஸ் ஜெ. டிவி நிறுவனத்தினர் நேரடி ஒளிபரப்பு செய்தனர். காவல் துறை, தலைமையின் கோபமான எச்சரிக்கைக்குப் பிறகு உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் அடைத்தனர்.
எடப்பாடி பழனிசாமி உட்பட அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் கேலரியில் உட்கார்ந்தனர். பத்திரிகையாளர்கள் போட்டோ எடுக்கும்போது எதிரில் இருந்த காலி வாட்டர் பாட்டில்களை அப்புறப்படுத்திவிட்டு போட்டோ வீடியோ எடுக்க அனுமதித்தனர் மூத்த முன்னாள் அமைச்சர்கள்.
கைது செய்யப்பட்டவர்களிடம் போலீஸார் பெயர், ஊர், வயது, உடம்பில் உள்ள அங்க அடையாளங்கள் பார்த்து எழுதியபோது, பல எம்எல்ஏக்கள் ’15நாட்கள் சிறைக்கு அனுப்பிவிடுவார்களோ’ என்று மனதில் சிறு பதற்றம் ஏற்பட்டது.
அந்த நேரத்தில்தான் புவனகிரி தொகுதி எம்எல்ஏ அருள்மொழி தேவன் மற்றும் ராஜ்யசபா எம்பி சி.வி சண்முகம் இருவரும் வெளியில் போக முயற்சித்தபோது, போலீஸார் தடுத்து நிறுத்தினர்கள். அப்போது போலீஸுக்கும் சி.வி சண்முகத்திற்கும் சிறு வாக்குவாதம் ஏற்பட்டது. எப்படியாவது அவர்கள் வெளியில் போகப் போராடிப் பார்த்தனர். ஆனால் போலீஸார் தடுத்து நிறுத்திவிட்டார்கள்.
காரணம், அருள்மொழி தேவன் தலைமையில் போராட்டம் ஏற்பாடு செய்திருந்தார், எடப்பாடி. அதற்கு சிறப்பு அழைப்பாளராக சி.வி சண்முகத்தை அறிவித்திருந்தார். அதை முறியடிக்கத்தான் போலீஸார் திட்டமிட்டு லாக் செய்தனர் என்கிறார்கள் அதிமுக எம்எல்ஏக்கள்.
உண்ணாவிரதம் இருந்தவர்கள், பிஸ்கெட் அல்லது உணவு சாப்பிடுகிறார்களா, தண்ணீர் குடிக்கிறார்களா என மீன் கொத்தி பறவைகளாக பார்த்துக் கொண்டு இருந்த உளவுத்துறை போலீஸார் வீடியோ கேமராக்களையும் ஆன்லைனில் வைத்திருந்தனர்.
ஆனால் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் அசையாமல், சாயாமல், ஒரு சொட்டு தண்ணீர் குடிக்காமல் திமுக அரசுக்கு எதிராக கோஷமிட்டப்படி இருந்தனர். அந்த நேரத்தில் ஏசி ஒருவர் எடப்பாடி பழனிசாமிக்கு கரிசனம் காட்டுவதுபோல், ’சார் தண்ணீர் கொஞ்சம் குடிங்க’ என்று வாட்டர் பாட்டிலை நீட்ட, அருகில் இருந்த முன்னாள் அமைச்சர் வேலுமணி கடுமையாக சத்தம்போட, எடப்பாடி பழனிசாமி தண்ணீர் பாட்டிலை கோபமாக தட்டிவிட்டார்.
பாதுகாப்பில் இருந்த போலீஸார் அவ்வப்போது தலைமைக்கு அப்டேட் செய்து கொண்டு இருந்தனர். நேரம் ஆக ஆக ரிமாண்ட் செய்ய வாய்ப்பு இல்லை, மாலையில் விட்டுவிடுவார்கள் என்ற நம்பிக்கை வந்ததும் கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்து சத்தமாகக் கோஷமிட்டனர்.
பெரும்பாலான எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் பிபி, சுகர், ஹார்ட் பிரச்சினை உள்ளவர்களாக இருந்தாலும், காலை 9.00 மணி முதல் தண்ணீர் குடிக்காமல் சுமார் 8 மணி நேரம் இருந்ததால், அனைவரின் முகத்திலும் லேசான சோர்வு காணப்பட்டது, மாலை 4.45 மணிக்கு எடப்பாடி பழனிசாமி கொஞ்சம் தண்ணீர் பருகினார்.
5.00 மணிக்கு ஜூஸ் குடித்துவிட்டு ஒரு நாள் உண்ணாவிரதம் போராட்டத்தை உணர்வுபூர்வமாக முடித்ததும் அனைவரையும் விடுதலை செய்தனர் போலீஸார்.
-வணங்காமுடி
பாம்பன் பாலம்: 10 நாட்களில் இரண்டாவது விபத்து!
திமுக அரசைக் கண்டித்து அண்ணாமலை ஆர்ப்பாட்டம்!