மதுரையில் வரும் ஆகஸ்ட் 20ல் மாநாடு நடத்தப்படும் என்று அதிமுக அவசர செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றபின் முதன்முறையாக அதிமுக அவசர செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று (ஏப்ரல் 16) நடைபெற்றது.
அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில், பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாநில தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், பிற மாநிலக் கழகச் செயலாளர்கள், கட்சி எம்பிக்கள், எம்எல்ஏக்கள் என சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் 15 முக்கிய தீர்மானங்கள் நிர்வாகிகளின் ஆதரவுடன் ஒருமனதாக அதிமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தீர்மானங்களின் பட்டியல்
1.அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு செயற்குழு பாராட்டு.
2.மதுரையில் வரும் ஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக மாநாடு நடத்தப்படும்.
3.எம்ஜிஆர், ஜெயலலிதா பிறந்தநாள் விழாவிற்கான அதிமுக பொதுக்கூட்டங்களை அனுமதி மறுக்கும் திமுக அரசுக்கு கண்டனம்.
4.சட்டமன்ற தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை திமுக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
5.கடன் சுமையை ரூ.2.5 லட்சம் கோடியாக அதிகப்படுத்திய திமுக அரசுக்கு எதிராக கண்டனம்.
6.பல்வேறு வரி சுமைகளை மக்கள் மீது திணித்துள்ள திமுக அரசுக்கு கண்டனம்.
7.தமிழ்நாட்டில் பெருகிவரும் போதை கலாச்சாரத்தை வேடிக்கை பார்த்துவரும் திமுக அரசுக்கு கண்டனம்.
8.சட்டமன்ற மரபு, ஜனநாயக மாண்புகளை தமிழ்நாடு அரசு சீரழிப்பது கண்டிக்கத்தக்கது.
9.சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்த திமுக அரசு முன்வர வேண்டும்.
10.அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் மீது பொய்வழக்குப் போடுவது கண்டிக்கத்தக்கது.
11.அதிமுக உறுப்பினர் பதிவு புதுப்பிப்பு, புதிய உறுப்பினர்கள் சேர்ப்பில் முனைப்போடு ஈடுபடவேண்டும்.
12.மக்களவை தேர்தலையொட்டி அதிமுக சார்பில் பூத் கமிட்டிகளை விரைந்து அமைக்க வேண்டும்.
13.மக்களவை, சட்டமன்ற தேர்தல்களில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றியை ஈட்ட வேண்டும்.
14.நடந்தாய் வாழி காவேரி திட்டம் மற்றும் காவேரி-கோதாவரி இணைப்புத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த மத்திய அரசுக்கு திமுக அரசு வலியுறுத்த வேண்டும்.
15.திமுகவுடன் ரகசிய உறவு வைத்து துரோகம் செய்தவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவோம்.
கிறிஸ்டோபர் ஜெமா