திமுகவும், அதிமுகவும் அண்ணன் தம்பி இயக்கம்தான் என்றாலும் பாதைகள் வேறு என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வத்திடம், திமுகவும், அதிமுகவும் அண்ணன் தம்பி போன்று இருப்பதாகவும் பாஜக தான் இடையில் பிரச்சினையை ஏற்படுத்துவதாகவும் அமைச்சர் கே.என்.நேரு கூறியது பற்றி ஓ.பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், அண்ணன், தம்பி இயக்கம் போன்று இருந்தாலும் மாறுபட்ட பாதையில் சென்று கொண்டிருக்கிறோம் என்றார். எம்.ஜி.ஆர் உருவாக்கிய பாதையில் நாங்கள் பயணித்து கொண்டிருக்கிறோம், திமுக அவர்கள் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று பன்னீர்செல்வம் கூறினார்.
திமுக, அதிமுகவை பாரதிய ஜனதா பிரிப்பதாக கூறுவதில் நம்பிக்கையில்லை என்றும் அவர் பதிலளித்தார். டெல்லி சென்று அமித்ஷாவை சந்திக்கும் திட்டம் இருக்கிறதா என்ற கேள்விக்கு, பாரத பிரதமர் தமிழகம் வர இருப்பதாக தகவல் வந்திருக்கிறது.
அந்த சமயம் உரிய வாய்ப்பு கிடைத்தால் பிரதமரை சந்திப்போம் என்று பன்னீர்செல்வம் கூறினார். அதிமுக மெகா கூட்டணியில் இணைய டி.டி.வி. தினகரன் விருப்பம் தெரிவித்தது பற்றி பேசிய அவர், இது வரவேற்கத்தக்க முடிவு என்றார்.
மேலும் வாய்ப்பு கிடைத்தால் டி.டி.வி. தினகரனையும் சந்திப்பேன் என்று தெரிவித்தார்.அதிமுக தலைமைக்குள் பிரச்சினை இருப்பது போன்ற மாயத்தோற்றம் உருவாகியிருக்கிறது. இது போக போக சரியாகிவிடும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
கலை.ரா
தொழில் வளர்ச்சி 4.0 மாநாடு தொடங்கியது!
ஹாலிவுட் பட பாணியில் ரகசிய அறை: சோழர் கால சிலைகள் மீட்பு !