தஞ்சையில் சசிகலாவை, அதிமுக எம்எல்ஏவும், ஓபிஎஸ் ஆதரவாளருமான வைத்திலிங்கம் திடீரென சந்தித்து பேசியுள்ளது அதிமுகவுக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக தலைமை பதவியைக் கைப்பற்ற எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. இதனையடுத்து இரு தரப்பினரும் நீதிமன்ற படியேறி முடிவிற்காக காத்திருக்கின்றனர்.
சசிகலாவுக்கு ஆதரவும்; எதிர்ப்பும்!
இதற்கிடையே ஓபிஎஸ், ”அதிமுகவில் பிரிந்து சென்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என்று கூறி வருகிறார். சசிகலா, டிடிவி தினகரனும் இணைய வேண்டும் என்றும் கூறினார்.
அதேவேளையில் ”தொண்டர்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே அதிமுகவில் பிரிந்தவர்கள் சேர முடியும். சசிகலா, தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோரை தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
அதனால் அவர்களுடன் இணைய மாட்டோம்” என்று அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்ற இபிஎஸ் நேற்று கூட கூறி இருந்தார்.
தஞ்சையில் நடந்த திடீர் சந்திப்பு!
இந்நிலையில் இன்று (செப்டம்பர் 9) தஞ்சையில் சசிகலா, ஓபிஎஸின் தீவிர ஆதரவாளரான வைத்திலிங்கம் சந்திப்பு நடைபெற்றது. இதுதொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி உள்ளன.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே காவரப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற திருமணவிழாவிற்காக சசிகலா மன்னார்குடியில் இருந்து புறப்பட்டு சென்றார்.
அதேபோல் அதிமுக எம்.எல்.ஏ வைத்திலிங்கமும் திருமண நிகழ்ச்சிக்காக எதிர்திசையில் சென்ற நிலையில் இருவரும் சந்தித்தனர்.
இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் வைத்திலிங்கம், சசிகலாவிடம் வாழ்த்து பெற்றார். அவருக்கு சசிகலாவும் இனிப்பு கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்த சந்திப்பு சுமார் 10 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்தது. ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளரும், எம்எல்ஏவுமான வைத்திலிங்கம், திடீரென சசிகலாவை சந்தித்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
பன்னீருக்கு ஆதரவு தெரிவிக்கும் எடப்பாடி ஆதரவாளர்கள்: வைத்திலிங்கம்