admk minister k.p.munusamy speech

இது திராவிட மண்..தைரியமிருந்தா நிர்மலா சீதாராமனை தேர்தலில் நிற்க சொல்லுங்க – பொங்கிய கே.பி.முனுசாமி

அரசியல்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் நடந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி பாஜகவை கடுமையாக சாடினார்.

தைரியமிருந்தால் நிர்மலா சீதாராமனை தமிழ்நாட்டில் தேர்தலில் நிற்கச் சொல்லுங்கள் என்று சவால் விட்டுள்ளார்.

அக்கூட்டத்தில் கே.பி.முனுசாமி பேசியதாவது:

நான் அண்ணாமலையையும், பிரதமர் மோடியையும் பார்த்து கேட்கிறேன். தமிழ்நாட்டில் உங்களுக்கு செல்வாக்கு உயர்ந்திருக்கிறது என்றால், தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு மத்திய அமைச்சர்கள் உங்களுடன் இருக்கிறார்கள்.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர்.

பாஜகவுக்கு தைரியமிருந்தால் இருவரையும் தமிழ்நாட்டில் எந்த தொகுதியிலாவது நிறுத்துங்கள். தமிழ்நாடு மக்கள் எப்படி பாடம் புகட்டுவார்கள் என்பதை அப்போது நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்.

இது திராவிட மண். இன்று தமிழ்நாடு எல்லா துறைகளிலும் முதன்மை மாநிலமாக இருக்கிறது. சுகாதாரம், மக்கள் நல்வாழ்வு, கல்வி, நீர் மேலாண்மை எல்லாவற்றிலும் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக இருக்கிறது.

பாஜகவின் ஆட்சி 17 மாநிலங்களில் நடக்கிறது. ஆனாலும் மத்திய அரசின் விருதுகள் தமிழ்நாட்டிற்குத் தான் கிடைக்கின்றன. அதிமுக ஆட்சியில் பல விருதுகளை பெற்றிருக்கிறோம். ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களால் ஏன் அந்த விருதுகளைப் பெற முடியவில்லை?

தமிழ்நாடு மக்கள் அரசியல் ஞானத்துடன் சிந்திக்கக் கூடியவர்கள். அதனால்தான் 50 ஆண்டுகாலமாக தேசியக் கட்சிகள் உள்ளே வராமல் திராவிடக் கட்சிகளே ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.

சமூக வலைதளங்களை வைத்துக்கொண்டு வார்ரூம் மூலம் ஷோ காட்டுவதால் இங்கு எதுவும் மாறாது. நீங்கள் 300 சீட்டு ஜெயிப்போம், 400 சீட்டு ஜெயிப்போம் என்று எந்த கணக்கு வேண்டுமானாலும் சொல்லலாம்.

ஆனால் தமிழ்நாட்டில் ஒன்றும் நடக்காது. தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணிதான் வெல்லும். எங்களுக்கு போட்டி திராவிடக் கட்சியான திமுக தான். பாஜக கிடையாது.

நாங்கள் இரண்டாவது இடத்திற்கு வந்துவிட்டோம் என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் தேர்தல் நடந்து வாக்குகள் எண்ணும் போதுதான் நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள், எத்தனை இடங்களில் டெபாசிட் இழக்கப் போகிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியும் என்று பாஜகவிற்கு நேரடியாக சவால் விடும் ரீதியில் பேசியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-விவேகானந்தன்

பொறுத்தது போதும்… எடப்பாடிக்கு அமித் ஷா இறுதி கெடு!

முதல்வர் ஸ்டாலினுக்கு விஜய் பிறந்தநாள் வாழ்த்து… இதுதான் பின்னணி!

+1
0
+1
1
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0