சட்டமன்றத்தில் சபாநாயகரின் அறிவுறுத்தலையும் மீறி இன்று (ஜூன் 26) அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று காலை நிலவரப்படி 61ஆக உயர்ந்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனையடுத்து நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு கள்ளக்குறிச்சி மரணம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரி அதிமுகவினர் நாள்தோறும் அமளியில் ஈடுபட்டு வந்தனர். இதனால் கடந்த 4 நாட்களாக அவர்கள் சபைகாவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.
இன்றும் தொடர்ந்த அமளி!
இந்த நிலையில் 5வது நாளாக இன்றும் சட்டமன்றத்திற்கு கருப்புச்சட்டை அணிந்து வந்த அதிமுகவினர், அவை தொடங்கியதும் அதே கோரிக்கையை வலியுறுத்தி தங்களது இருக்கையில் அமராமல் அமளியில் ஈடுபட்டனர்.
அதற்கு சபாநாயகர் அப்பாவு, ”கேள்வி நேரத்திற்கு பின்பு பேச அனுமதி வழங்கப்படும்” என பேரவை விதிகளை சுட்டிக்காட்டினார். ஆனால் அதனை ஏற்காமல் தொடர்ந்து அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது அப்பாவு, “8 நிமிடங்கள் அவையை நடக்கவிடாமல் செய்து இருக்கிறீர்கள். இருக்கையில் அமரவில்லை என்றால் நடவடிக்கை எடுப்பேன்” என அறிவுறுத்தினார்.
அதையும் ஏற்க மறுத்து அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டதோடு, சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டனர்.
இதனையடுத்து அவர்களை வெளியேற்ற சபை காவலர்களுக்கு உத்தரவிட்டார்.மேலும் பேரவை விதிகளை தொடர்ந்து மீறி வருவதால் நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடர் முழுவதும் அதிமுக உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்து அப்பாவு நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஸ்டாலின், துரைமுருகன் குற்றச்சாட்டு!
இதுகுறித்து பேசிய அவை முன்னவர் துரைமுருகன், “பிரச்சினையை சபையில் பேச எல்லோருக்கும் உரிமை உண்டு. நாங்களும் பேசி இருக்கிறோம். கருப்புச் சட்டை அணிந்து வந்து ஊடகத்திடம் பேசிவிட்டு வீட்டுக்குப் போய்விடுகிறார்கள். விளம்பரத்துக்காகவே அதிமுகவினர் தொடர்ந்து விதிகளுக்கு முரணாக செயல்படுகின்றனர்” என்று குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சியினர் குறிப்பாக அதிமுக எழுப்ப விரும்பும் கேள்விகள் தொடர்பாக பதிலளிக்க இந்த அரசு தயாராக உள்ளது என்று சட்டமன்றம் தொடங்கிய முதல் நாளிலிருந்தே தெளிவாக தெரிவித்து வருகிறேன்.
ஆனாலும், மக்கள் பிரச்னையைப் பற்றி பேச வாய்ப்பளிப்பதாகத் தெரிவித்தும், அதை ஏற்க மனமில்லாமல், எதிர்க்கட்சித் தலைவர் வெளியில் சென்று பேசுவது என்பது இந்தப் பேரவையினுடைய மாண்புக்கும், மரபுக்கும் ஏற்புடைய செயல் அல்ல.
பிரதான எதிர்க்கட்சியாகச் செயல்பட வேண்டிய அதிமுக, மக்களுக்கு ஆற்ற வேண்டிய ஜனநாயகக் கடமையை ஆற்றாமல், வீண் விளம்பரத்தைத் தேடுவதிலேயே முனைப்பாக உள்ளது.
ஆனால், இந்தத் துயர சம்பவம் குறித்து உண்மையான அக்கறையுடன் உரிய நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொண்டிருக்கிறது. இதுதான் நமக்கும் அவர்களுக்கும் உள்ள வேறுபாடு” என ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
சரிவில் தங்கம், வெள்ளி விலை! : மக்கள் மகிழ்ச்சி!
வேலைவாய்ப்பு : தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பணி!