“ஆண்டிகள் சேர்ந்த மடம்” – ஓபிஎஸ், சசிகலா குறித்து விமர்சித்த ஜெயக்குமார்

Published On:

| By Kalai

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில், ஆண்டிகள் மடம் பற்றி பேசி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை என்று சசிகலா, ஓபிஎஸ் குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்து இருக்கிறார்.

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று(டிசம்பர் 27) நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “20 மாத கால திமுக ஆட்சியில் ஸ்டாலின் குடும்பத்திற்கு தான் விடியலே தவிர தமிழகத்திற்கு இல்லை.

அடாவடி, அராஜகம், சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் வகையில் திமுக அரசு செயல்படுகிறது. வாக்களித்த மக்களுக்கு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றியது.

திமுக அரசின் மக்கள் விரோத போக்குகளை மக்களிடம் எடுத்துச் செல்வோம். மக்கள் மத்தியில் திமுக அரசு சரிவை சந்தித்திருக்கிறது. மக்கள் தேர்தலுக்காக காத்திருக்கிறார்கள்.

2024-ல் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலிலும் இணைந்து வந்தால் மிகவும் நல்லது. கோட்டையை விட்டே அவர்கள் சென்றுவிடுவார்கள். நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராவது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்” என்று கூறினார்.

ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை குறித்து பேசப்பட்டதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “எங்கள் கட்சியில் பிரச்சினை இல்லை. இல்லாத ஒரு விஷயத்தை பற்றி ஆலோசிக்க வேண்டிய அவசியம் இல்லை.

எங்கள் நோக்கம் 2024 தேர்தலில் திமுகவை வீழ்த்துவதுதான். நாற்பதும் நமதே என்ற இலக்கை நோக்கிதான் நாங்கள் நிர்ணயித்தோம். அதைத் தவிர்த்து ஆண்டிகள் சேர்ந்து கட்டும் மடத்தைப் பற்றி பேசி எங்கள் பொன்னான நேரத்தை வீணாக்க நாங்கள் தயாராக இல்லை” என்றார்.

யார் தலைமையில் கூட்டணி என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், “அதிமுக தலைமை கூட்டணியில் தான் நாடாளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணி அதில் எந்த சந்தேகமும் இல்லை.

சட்டமன்றமோ, நாடாளுமன்றமோ எந்த தேர்தலாக இருந்தாலும் அதிமுக தலைமையில்தான். அதற்கு ஒத்துக்கொண்டு எந்தக் கட்சி வருகிறதோ அதை சேர்த்துக் கொள்வோம்” என்றார்.

அதிமுக கட்சி, சின்னம் தொடர்பான எடப்பாடி பழனிசாமியின் நோட்டீஸ்க்கு ஓபிஎஸ் அளித்த பதில் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். “நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.

அதையெல்லாம் விட்டு ஆண்டிகள் சேர்ந்து கட்சி சின்னத்தையும், கொடியையும் பயன்படுத்தி வருகின்றனர். எனவே ஓபிஎஸ் அளித்துள்ள வக்கீல் நோட்டீஸ் எந்த வகையிலும் எடுபடப் போவதில்லை. அதனால் எந்த தாக்கமும் இருக்காது” என்று ஜெயக்குமார் பேசினார்.

கலை.ரா

ரூ. 1000 டோக்கன்: கூட்டுறவுத்துறை அமைச்சர் விளக்கம் !

குடிநீரில் மனித கழிவு: அதிர்ச்சியில் பட்டியலின மக்கள்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.