எடப்பாடி பழனிசாமியை கண்டித்தும், மதுரையில் நடைபெறவுள்ள அதிமுக எழுச்சி மாநாட்டைக் கண்டித்தும் தேவர் இன கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாளை (ஆகஸ்ட் 19) மதுரையில் அதிமுக மாநாடு நடைபெறுகிறது. இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு இந்த மாநாட்டை நடத்த பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார் என்று அதிமுகவினர் கூறுகின்றனர். இதனை முன்னிட்டு இன்றே மதுரைக்கு அதிமுகவினர் படையெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்தச்சூழலில் அதிமுக மாநாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், எடப்பாடி பழனிசாமி வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் தேவர் இன கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
10.5 சதவிகித உள் இட ஒதுக்கீட்டில் தேவர் சமூகத்தினருக்குத் துரோகம் இழைத்ததாகக் கூறி எடப்பாடி பழனிசாமி மதுரை மாநாட்டிற்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும்,
கொடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிசாமியைக் கைது செய்யக் கோரியும் மதுரை முனிச்சாலை பகுதியில் தேவரின கூட்டமைப்பினர் சார்பில் கருப்புகொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ,நெல்லை, தூத்துக்குடி, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அப்போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
முக்குலத்தோர் எழுச்சி கழகம், பசும்பொன் தேசிய கழகம், தென்னாட்டு மக்கள் கட்சி, பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கம், முக்குலத்தோர் தேசிய கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, தென் மாவட்டத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களை தோற்கடிக்க வேண்டும் எனவும்,
தென் மாவட்டங்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி எங்கு சென்றாலும் கருப்பு கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்து தோற்கடித்து பாடம் புகட்டுவோம் எனவும் கோஷம் எழுப்பினர்.
ஏற்கனவே முக்குலத்து சமூக மக்கள் எடப்பாடி பழனிசாமி மீது கோபத்தில் இருப்பது தொடர்பாக, “டிஜிட்டல் திண்ணை: மதுரை மாநாட்டுக்கு முன் தேவர் நினைவிடம் செல்கிறாரா எடப்பாடி?” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதில், முக்குலத்து சமூகத்தினர் கோபத்தில் இருப்பது பற்றி அதிமுகவை சேர்ந்த அந்த சமூகத்தினர் சிலரே எடப்பாடி பழனிசாமிக்கு தகவல் தெரிவித்தது, அதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் எடப்பாடி பழனிசாமி பேசியது பற்றி குறிப்பிட்டிருந்தோம்.
இந்தசூழலில் நாளை மாநாடு நடைபெற இருக்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக இன்று மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருக்கிறது.
எனவே நாளை முக்குலத்தோர் சமூக மக்கள் அதிமுக மாநாட்டில் கலந்துகொள்வார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இராமலிங்கம்