கருப்ப சாமிய வேண்டிக்கங்க: தீர்ப்புக்கு முன் ஓபிஎஸ் முக்கிய ஆலோசனை!

அரசியல்

அதிமுக பொதுக் குழு தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் நாளை  (ஆகஸ்டு 17)  தீர்ப்பு வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் இன்று (ஆகஸ்டு 16) மாலை 6.30 மணி முதல்  ஓ.பன்னீர்செல்வம் சென்னை ராதாகிருஷ்ணன் சாலையிலுள்ள ஒரு தனியார் ஹோட்டலில் கட்சி நிர்வாகிகளை சந்தித்தார். இந்த சந்திப்பு மூன்று மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.

கோவை செல்வராஜ், புகழேந்தி, கொளத்தூர் கிருஷ்ண மூர்த்தி, பொன்னையனிடம் ஆடியோவில் போட்டு வாங்கிய நாஞ்சில் கோலப்பன் உள்ளிட்ட பலரும் வந்திருந்தனர்.

கொரோனா காரணமாக கடந்த இரு வாரங்களாக நிர்வாகிகளை பெரிய அளவில் சந்திக்காத ஓ.பிஎஸ் இன்று மாலை 6 மணி வாக்கில் ஹோட்டலுக்கு வந்தார். ஏற்கனவே ஓபிஎஸ் சை சந்திக்க நேரம் கேட்டு காத்திருந்த நிர்வாகிகளுக்கு சந்திக்க நேரம் கொடுத்திருந்தார் பன்னீர்செல்வம்.

இந்த நிலையில் அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, சென்னை  உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு நிர்வாகிகள் ஹோட்டலுக்கு திரண்டனர். சுமார் 500 பேர் வரை கூடிவிட்டனர். மாலை முதல் ஒவ்வொரு மாவட்டமாக அழைத்து அனைவருடனும் பேசி அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டு அனுப்பினார் ஓ.பன்னீர். சந்திக்க வந்தவர்களில் ஏற்கனவே எடப்பாடி ஆதரவாளர்களாக இருந்தவர்களும் உண்டு. அவர்கள் மனம் மாறி தற்போது பன்னீர் செல்வத்தை சந்திக்க வந்திருக்கிறார்கள். 

பன்னீரை சந்தித்த நிர்வாகிகளிடம் பேசினோம்.  “ரொம்ப உற்சாகமாக இருக்காரு. நாளை தீர்ப்பு நமக்கு நல்லபடியா வரும், ஒண்ணும் கவலைப்படாதீங்கனு  சிரிச்சுக்கிட்டே சொன்னாரு” என்கிறார்கள். 

9.45 மணியளவில் ஹோட்டலில் இருந்து வெளியே வந்தார் ஓ.பன்னீர் செல்வம். அவரிடம் பேட்டியெடுக்க பத்திரிகையாளர்கள் குவிந்தார்கள். புன்னகைத்தபடியே சென்ற பன்னீர் தனக்கு நன்றாக அறிமுகமான ஓர் பத்திரிகையாளரைப் பார்த்து, ‘கருப்ப சாமியை வேண்டிக்கங்க. நாளைக்கு நல்ல தீர்ப்பு வரும்’ என்று சொல்லிவிட்டு நகர்ந்தார். அந்த பத்திரிகையாளருக்கு குல தெய்வம் கருப்ப சாமியாம்.

வேந்தன்

+1
1
+1
3
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.