முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆறாவது ஆண்டு நினைவு தினமான நேற்று (டிசம்பர் 5) எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா என நான்கு தரப்பினரும் தனித்தனியாக மெரினாவில் இருக்கும் அவரது நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.
எடப்பாடி பழனிசாமி அணி, ஓபிஎஸ் அணி, டிடிவி தினகரன் அணி, சசிகலா அணி ஆகியோர் சில தினங்களுக்கு முன்பே மெரினாவில் கூட்டத்தைக் கூட்ட திட்டமிட்டு தனித்தனியாக அழைப்பு விடுத்தார்கள்.
ஆனால், கூட்டத்தைக் கூட்ட ஒபிஎஸ் அணியைத் தவிர மற்ற மூன்று அணியினரும் ஒருவருக்கும் ஒரு பைசா செலவு பண்ணவில்லை என்பதுதான் ஆச்சரியம்.
மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதா சமாதிக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மூவாயிரம் பேருடன் வந்து மலர் தூவி மரியாதை செலுத்திவிட்டு சென்றார்.
அடுத்தாக வந்த ஒபிஎஸ், இபிஎஸ்ஸை மிஞ்சும் அளவிற்கு சுமார் நான்காயிரம் தொண்டர்களுடன் வந்து மரியாதை செலுத்திவிட்டு சென்றார்.
இபிஎஸ், ஒபிஎஸ் இரு அணியினரின் கூட்டத்தை மிஞ்சும் அளவிற்கு கூட்டத்தைக் கூட்டி மரியாதை செலுத்தியிருக்கிறார் டிடிவி தினகரன்.
நான்காவதாக வந்த சசிகலா குறைவான கூட்டத்தினருடன் வந்து மரியாதை செலுத்திவிட்டு கண்கலங்கியபடி வீடு திரும்பினார்.
இதில் ஹைலைட் என்னவென்றால் டிடிவி தினகரனும் சசிகலாவும் முன்னும் பின்னுமாகதான் வாலாஜா ரோடு கலைவாணர் அரங்கம் அருகில் வந்தனர். அங்கிருந்து டிடிவி தினகரன் திறந்த ஜீப்பில் ஜெ.நினைவிடத்துக்கு புறப்பட்டார்.
சசிகலா தன்னுடன் வந்த தொண்டர்களுடன் நடைப்பயணமாக சென்றவர் எழிலகம் அருகில் நின்று விட்டார்.

காரணம் ஜெயலலிதா நினைவிடத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் தினகரன் பேசிக்கொண்டே இருந்தார்.
அப்போது சசிகலாவுடன் வந்தவர்கள், ’அம்மா நீங்க வாங்கம்மா’ என்று சொல்ல, சசிகலாவோ, ‘அவரு ஒரு கட்சி தலைவர். பொறுமையாக பேசிட்டு போகட்டும்.
அவரை டிஸ்டப் பண்ணவேண்டாம்’ என்று 15 நிமிடங்கள் காத்திருந்து, தினகரன் வெளியில் வந்த பிறகு அவருக்கு வந்த கூட்டத்தைப் பொறுமையாக பார்த்து விட்டுத்தான் ஜெயலலிதா சமாதிக்குள்ளே சென்றார் சசிகலா.

இது ஏற்கெனவே சசிகலாவும் தினகரனும் பேசி முடிவெடுத்த நாடகம் என்கிறார்கள் எடப்பாடி பழனிசாமி அணியினர்.
உளவுத்துறை போலீசாரோ, ‘அதிமுக நான்காக பிரிந்து கிடப்பது தெளிவாகத் தெரிகிறது. ஒவ்வொருவரும் தங்களது பலத்தை போட்டி போட்டுக் கொண்டு காட்டியிருக்கிறார்கள்.
இவர்கள் எல்லாம் ஒட்டுமொத்தமாக இணைந்திருந்தால் ஜெயலலலிதா நினைவு தினத்தன்று சுமார் 15 ஆயிரம் பேர் திரண்டு ஒரே நேரத்தில் வந்திருப்பார்கள். சென்னையே திணறியிருக்கும்” என்று கூறுகிறார்கள்.
–வணங்காமுடி
குஜராத் தேர்தல்: வாக்குச் சதவிகிதம் குறைவு ஏன்?
தாம்பரம்-வேளச்சேரி இடையே மெட்ரோ ரயில்?