நன்றி மறந்து அன்புமணி ராமதாஸ் இப்படி பேசினால் தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல, உங்கள் பக்கம் உள்ள தொண்டர்கள் கூட உங்களை மதிக்க மாட்டார்கள் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
பாமக சார்பில் புதுச்சேரி அருகே நேற்று நடைபெற்ற புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு பேசினார்.
நான்கு துண்டாக அதிமுக
அப்போது அவர், “சில கட்சிகள் தமிழ்நாட்டில் விளம்பர அரசியலையே செய்து வருகின்றனர். ஒருவர் வாட்ச்சை காட்டுகிறார். மற்றொருவர் அடுக்குமொழியில் பேசுகிறார்.
அதிமுக நான்காக உடைந்து இருக்கிறது. திமுக மீது விமர்சனம் பலமாக இருக்கிறது. மற்ற கட்சியை எடுத்துக்கொண்டால் சத்தம் மட்டுமே அதிகம் கேட்கிறது.” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று அதிமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டு ஆலோசனை மேற்கொண்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக குறித்து அன்புமணி ராமதாஸ் கூறிய கருத்து குறித்து ஆவேசமாக பதிலடி கொடுத்தார்.
அதிமுக இல்லை என்றால் பாமக இல்லை!
அவர் பேசுகையில், ”அதிமுக குறித்து அன்புமணி ராமதாஸ் பேசியது வருத்தமளிக்கிறது. அதேவேளையில் அவருக்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்து கொள்கிறேன்.
பாமக ஏறி வந்த ஏணி அதிமுக. பாமகவை ஏற்றி விட்டது ஜெயலலிதா. அதிமுக இல்லை என்றால் பாமக என்ற கட்சிக்கு அங்கீகாரமே கிடைத்திருக்காது. ஜெயலலிதா கூட்டணி வைத்த உடன்தான் பாமகவிற்கு அங்கீகாரம் கிடைத்தது.
1991 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பாமக ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. அதற்குப் பிறகு நாடாளுமன்ற தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.
பின்னர் 1998 ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்து 5 சீட்டு கொடுத்த பிறகுதான் நான்கு இடத்தில் வருகிறார்கள். நான்கு இடத்தில் ஜெயித்ததால் மட்டுமே இந்திய தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.
நன்றி மறந்து அன்புமணி ராமதாஸ் இப்படி பேசினால் தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல, உங்கள் பக்கம் உள்ள தொண்டர்கள் கூட உங்களை மதிக்க மாட்டார்கள். இதனை அன்புமணி ராமதாஸ் நினைத்து பார்க்க வேண்டும்.
அதிமுக சிறுமை ஆகி விடுமா?
2001 ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாமகவிற்கு 27 சீட்டுகளை ஜெயலலிதா கொடுத்தார். அதில் 20 இடங்களில் பாமக வென்றது. உங்கள் தயவால் நாங்கள் வென்றோமா? அதிமுக தயவால் மட்டுமே நீங்கள் வெற்றி பெற்றீர்கள்.
அதிமுகவால் மட்டுமே சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் உள்ளே சென்றீர்கள். எம்பி ஆனீர்கள். மத்திய அமைச்சர் ஆனீர்கள். அதையெல்லாம் மறந்து விட்டு பலம் வாய்ந்த அதிமுகவை சிறுமைப்படுத்த வேண்டும் என்று நினைத்து பேசினால் அதிமுக சிறுமை ஆகி விடுமா?
அதிமுக தான் அன்புமணி ராமதாஸுக்கு எம்பி என்ற பதவியை அடையாளம் காட்டியது. அன்புமணி கருத்தை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவரின் கூற்று மற்றவர்கள் எள்ளி நகையாடும் அளவிற்கு தான் உள்ளது.
அதனால் இது போன்ற கருத்துக்களை சொல்லி சிறுமைப்படுத்துகின்ற வேலையை எதிர்காலத்தில் அவர் செய்ய வேண்டாம். உங்கள் கட்சி கூட்டத்தில் உங்களை பற்றி பேசுங்கள்.
மாறாக அதிமுகவை வீணாக சீண்டினால் அதற்கு தக்க பதிலடியை நாங்கள் கொடுப்போம். தயங்க மாட்டோம் . அவர் ஒன்றை சொன்னால் நாங்கள் 100-ஐ சொல்வோம்.” என்றார்.
கிறிஸ்டோபர் ஜெமா
பணமதிப்பழிப்பு தீர்ப்பு : மத்திய அரசுக்கு விழுந்த அடி – காங்கிரஸ்!
புகைப்பட கலைஞர் திடீர் மரணம் : முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!