அணைந்து போன நெருப்பு: அதிமுகவை விமர்சிக்கும் அண்ணாமலையின் வலதுகரம்

Published On:

| By Monisha

admk is Extinguished fire

’எங்களை டச் பண்ணா நெருப்போட விளையாடுற மாதிரி’ என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதை பாஜக மாநில விளையாட்டு பிரிவு தலைவர் அமர்பிரசாத் ரெட்டி விமர்சித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டார். இது வெறும் பார்ட் 1 தான் என்று கூறியவர் தொடர்ந்து தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அனைத்து கட்சி அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளின் சொத்து பட்டியலை பார்ட் 4 வரை வெளியிடுவேன் என்று கூறியிருந்தார்.

இதனால் அண்ணாமலை கூட்டணிக் கட்சியான அதிமுகவின் சொத்து பட்டியலையும் வெளியிடுவாரா? என்ற கேள்விகளும் தொடர்ந்து எழுந்து வருகிறது. இதற்கு அதிமுகவினர், சொத்து பட்டியலை வெளியிட்டால் சமாளிக்கத் தயாராக உள்ளோம் என்று பதிலளித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று (ஏப்ரல் 17) விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 268-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் அதிமுக முன்னாள் அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் அண்ணாமலை சொத்து பட்டியல் வெளியிடுவது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்துப் பேசிய அவர், “தேவையில்லாமல் எங்களை டச் பண்ணினால் நெருப்போடு விளையாடுற மாதிரி. நெருப்போடு விளையாடக் கூடாது” என்று பாஜகவை எச்சரித்தார்.

ஜெயக்குமார் பேசியதை விமர்சிக்கும் வகையில் அண்ணாமலைக்கு நெருக்கமானவரும், தமிழ்நாடு பாஜக விளையாட்டு பிரிவு தலைவருமான அமர்பிரசாத் ரெட்டி இன்று (ஏப்ரல் 17) ட்விட் செய்துள்ளார்.

அதில், “எங்களை தேவையில்லாம ‘டச்’ பண்ணினா நெருப்போட விளையாடற மாதிரின்னு அண்ணன் ஜெயக்குமார் சொல்லி இருக்காரு. அணைந்து போன நெருப்போட விளையாடுறது எங்களுக்கும் பிடிக்காதுண்ணே… முதல்ல நீங்க எரியும் நெருப்பாகிட்டு அப்புறம் வாங்க. நாங்க எப்படி விளையாடுவோங்கறதை ரசிச்சுப் பாருங்க” என்று குறிப்பிட்டுள்ளார்.

இது அதிமுக-பாஜக மோதலை மீண்டும் பற்றி எரிய வைத்திருக்கிறது.

மோனிஷா

பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தது ஏன்?: கர்நாடக முன்னாள் முதல்வர்!

உயரும் முத்திரைத்தாள் கட்டணம் !

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share