admk Indirect negotiations with pmk
மக்களவைத் தேர்தலுக்காக பாமகவுடன் அதிமுக மறைமுக பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்பட்டு வரும் நிலையில், இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (மார்ச் 8) மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கேக் வெட்டி அதிமுக பெண் நிர்வாகிகள் கொண்டாடினர்.
இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், தேர்தல் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அவர், “கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவருக்கும் பொதுவான உடன்பாடு ஏற்படும் வரை கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறும். தேர்தலுக்கு முன்னதாக கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்.
பாமகவிடம் மறைமுக பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அதை சி.வி.சண்முகமும் சொல்லிவிட்டார். கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தால் உங்களிடம் தெரிவிப்போம்.
ஊடகங்கள் தான் பாஜகவுக்கு வாக்கு சதவிகிதம் அதிகமாக இருப்பதாகப் போடுகிறீர்கள். எதை வைத்துக் கணிக்கிறீர்கள் என்று தெரியவில்லை” என குறிப்பிட்டார்.
பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்படுமா? சமீபத்தில் பாஜக தரப்பில் இருந்து அணுகியதாக கூறப்படுகிறதே? என்ற கேள்விக்கு, “பாஜகவிலிருந்து அதிமுக விலகிவிட்டது என தெளிவாக அறிவித்துவிட்டோம். அவர்கள் கதவுகள், ஜன்னல்கள் திறந்து வைத்திருப்பதாகச் சொன்னால் நாங்கள் என்ன செய்யமுடியும்?” என்றார்.
“அதிமுக பாஜக கூட்டணியிலிருந்து விலகியது ஒரு நாடகம். எதிர்ப்பு வாக்குகளை பிரிப்பதற்குதான் வெளியேறியிருக்கிறார்கள். அது பாஜகவுக்கு சாதகமாக அமையும்” என்று திருமாவளவன் கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு….
“அவருக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம். எங்கள் கட்சி கணக்கு என்னவென்று எங்களுக்குத் தெரியும். 30 ஆண்டுகாலம் ஆட்சி செய்த கட்சி. எங்களுக்கு பாடம் சொல்லித்தரக் கூடிய அவசியம் இல்லை. கொள்கையில் அடிப்படையில்தான் நாங்கள் செயல்படுவோம். கூட்டணி என்பது தேர்தல் சமயத்தில் அமைவது. பாஜக நகராட்சி தேர்தலின்போது வெளியே போய்விட்டது. அப்போது யாரும் எதுவும் சொல்லவில்லையே. எங்களுடைய கட்சியின் நலன் கருதிதான் நாங்கள் செயல்படுகிறோம்” என்றார்.
பிரதமர் மோடி இப்போது இருக்கிற தலைவர்களைப் பற்றி பேசவில்லை. மறைந்த தலைவர்களை பற்றித்தான் பேசியிருக்கிறார். நல்லது செய்தால் யார் வேண்டுமானால் பாராட்டுவது இந்தியாவின் கலாச்சாரம் என்று குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, யாருக்கு அதிக செல்வாக்கு இருக்கிறது என்பதை தேர்தல் மூலம் மக்கள் தெரிவிப்பார்கள்” என குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
நடிகர் அஜித்குமார் எப்படி இருக்கிறார்? : வெளியான புதிய தகவல்!
admk Indirect negotiations with pmk