தெறிக்கவிட்ட பன்னீர் டீம்: தெறித்து ஓடிய எடப்பாடி டீம்: சென்னையில் சம்பவம் செய்த தேனி-ஒரத்தநாடு

Published On:

| By Guru Krishna Hari

அதிமுக தலைமைக் கழகத்திற்கு ஜுலை 11 ஆம் தேதி காலை ஓ.பன்னீர்செல்வம் வந்தபோது எடப்பாடியின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், இரு தரப்பினரும் கல், கம்பு, போன்ற கொடூரமான ஆயுதங்களுடன் தாக்கிக்கொண்டனர். இதுகுறித்து இரு தரப்பிலும் சுமார் 400 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது போலீஸ்,

பன்னீர் ரவுடிகளோடு கட்சி அலுவலகத்துக்குள் சென்றார் என்று எடப்பாடி பொதுக்குழுவில் தாக்கினார். ஆனால் ஓ. பன்னீர்செல்வம் தரப்பினரோ, ‘எடப்பாடி ஆட்கள் ஐந்து நாட்களாக அதிமுக தலைமைக் கழகத்தைச் சுற்றி ஆயுதங்களோடு இருந்தனர்” என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

இந்த நிலையில் அதிமுக அலுவலகத்தில் நடந்த சம்பவங்களுக்குப் பிறகு போலீஸ் விசாரணையைத் தொடங்கியுள்ளது. நாமும் இதுகுறித்து விசாரித்தோம்.

“ஜூன் 23 ஆம் தேதி நடந்த பொதுக் குழுவில் ஓ.பன்னீர்செல்வத்தின் மீது எடப்பாடி ஆதரவாளர்களால் வாட்டர் பாட்டில்கள், காகிதங்கள் வீசப்பட்டன. அவரை எதிர்த்து வெளிப்படையாக உச்சரிக்க முடியாத வார்த்தைகளையும் வெளிப்படுத்தினார்கள் எடப்பாடி ஆதரவாளர்கள்.

இந்த பின்னணியில் மீண்டும் ஜூலை 11ஆம் தேதி ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ் இல்லாமல் பொதுக்குழுவைக் கூட்டினார் எடப்பாடி பழனிசாமி. பொதுக்குழு நடைபெறும் நேரத்தில் அதிமுக தலைமை கழகத்துக்கு ஒபிஎஸ் ஆதரவாளர்களுடன் செல்வார் என்ற தகவல் எடப்பாடிக்கு கிடைக்க, அவர் முன்னெச்சரிக்கையாக முதல் நாளான ஜூலை 10 ஆம் தேதி இரவு ஏழு மணிக்கு மாவட்டச் செயலாளர் ஆதிராஜாராமை அழைத்தார். பன்னீரை தலைமைக் கழகத்துக்குள் விடாத அளவுக்கு பார்த்துக் கொள்ளுங்கள் என்று உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து ஆதிராஜாராம் தனது ஆட்களையும் சென்னையில் இருக்கும் தி நகர் சத்யா, வேளச்சேரி அசோக், விருகை ரவி ஆகியோரின் ஆட்களையும் தலைமைக் கழகத்தைச் சுற்றி நிறுத்தியிருந்தார். முதல் நாள் இரவே தலைமை அலுவலகம் அமைந்துள்ள சாலையில் உள்ள கடை மற்றும் வீட்டு மாடிகளில் கற்களை தயாராக வைத்திருந்தனர் ஆதியின் ஆட்கள்.

இந்த நகர்வுகள் பன்னீருக்கும் முன்கூட்டியே தெரியவந்தது. எடப்பாடியின் திட்டத்தை முறியடித்து அதிமுக அலுவலகத்தைக் கைப்பற்ற திட்டமிட்ட அவர்… வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், எம்பி ரவீந்திரநாத் ஆகியோருடன் ஆலோசனைகள் செய்தார். தஞ்சை, தேனி, ஒரத்தநாடு, மதுரை போன்ற தென் மாவட்டங்களிலிருந்து ஜூலை 9,10, 11 ஆகிய தேதிகளில் ஆட்களை வரவழைத்து யார் யார் எங்கு இருக்கவேண்டும், பன்னீர்செல்வம் வாகனம் பின்னால் எத்தனை வாகனங்கள் போகவேண்டும், வாகனத்தில் என்னென்ன பொருட்கள் இருக்க வேண்டும் என்பதைத் தயார் செய்து வைத்துவிட்டார்கள்.

ஜூலை 11 காலையில் அதிமுக தலைமை கழகத்தில் யார் இருக்கிறார்கள் எத்தனைப்பேர் இருக்கிறார்கள் என்ற தகவல்களைச் சேகரித்தார் வைத்தியலிங்கம். அதற்கு ஏற்றார்போல் ஓபிஎஸ் வாகனம் காலை 8.00 மணிக்கு புறப்பட்டதும் முன்னும் பின்னும் செல்லும் வாகனங்களில் உருட்டுக் கட்டை, ஒன்னரை ஜல்லி கற்கள் எடுத்துச் செல்லப்பட்டன.

ஓபிஎஸ் வீட்டிலிருந்து புறப்பட்டதும் அதிமுக தலைமை கழகத்தில் கல்லெறிச் சம்பவங்கள் அரங்கேறின. ஆதி ராஜாராமின் ஆட்கள், ‘விரட்டுங்க… ஏறி வாங்கடா, விடாதீங்கடா என்று குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ஒபிஎஸ் வாகனம் அலுவலகம் அருகில் வந்ததும், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திடீரென மாஸாக முன்னேறினார்கள்.

சூழ்நிலையை அறிந்த ஆதிராஜாராம், சத்யா, விருகை ரவி மூவரும் கொஞ்சம் கொஞ்சமாக நழுவி பாதுகாப்பாக காருக்கு சென்று புறப்பட்டுவிட்டார்கள், சில நாட்கள் முன்புவரை பன்னீர் அணியில் இருந்த வேளச்சேரி அசோக் மட்டும் வேட்டியை மடித்துக்கொண்டு வாங்கடா வாங்கடா என்று பன்னீர் ஆட்களை நோக்கி கத்தினார். அந்த நேரத்தில் அவர் மீது இரண்டு கற்கள் விழுந்ததும் அவரும் வெளியேறிவிட்டார். இத்தனை சம்பவங்களையும் நிகழ்த்திய பிறகு ஒபிஎஸ் தலைமை அலுவலகத்திற்குள் நுழைந்துவிட்டார்.

ஒபிஎஸ் வீட்டிலிருந்து புறப்பட்டதிலிருந்து தலைமை கழகம் வரும் வரையில் அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

எடப்பாடி தரப்பினரிடம் பேசியபோது, “பன்னீர் தரப்புல இந்த அளவுக்கு விகரஸா வருவாங்கனு எதிர்பார்க்கலை. தெரிந்திருந்தால் நாங்களும் முன்னெச்சரிக்கையுடன் வந்திருப்போம்” என்றார்

ஓபிஎஸ் ஆதரவாளர்களைத் தொடர்புகொண்டு கேட்டோம். “இப்போதுதான் திருச்சி பக்கமாக போய்கிட்டிருக்கோம். அண்ணன்(வைத்தியலிங்கம்) இப்படியெல்லாம் நடக்கும்னு சொல்லலை, தெரிஞ்சிருந்தா பொருட்கள் எடுத்து வந்திருப்போம், ஆயிரக்கணக்கான பேர் வந்திருந்தாலும், தேனி, ஒரத்தநாடு சேர்ந்த சுமார் 500 பேர்கொண்ட டீம் நாங்கதான் எடப்பாடிக்காக வந்தவங்களோட பொருட்களைப் பிடுங்கி அவர்களைத் தெறிக்கவிட்டோம், அவர்கள் போட்ட பெட்ரோல் வெடிகுண்டும் வெடிக்கவில்லை. எல்லாம் சீன் போட வந்தவர்கள், கூலிக்கு வந்தவர்கள் உயிருக்குப் பயந்து ஓடிப் போனார்கள். நாங்கள் உணர்வோடு வந்தோம். அதான் எதிர்கொண்டோம், நாங்கள் எரியும் கல் 200 அடி தூரம் போகும். அவர்கள் எரியும் கல் நூறு அடி தூரம்கூட வரவில்லை. எங்களுக்கு சத்யா, ஆதிராஜாராம்லாம் யார்னு அடையாளம் தெரியாது. தெரிஞ்சிருந்தா அவர்களைக் கிழித்து அடையாளம் வைத்திருப்போம்” என்றவர்கள் கடைசியாக ஒன்று சொன்னார்கள்.

“ஒபிஎஸ் இப்போது திறந்த பெட்டியை இரண்டு வருடம் முன்பே திறந்திருந்தால் அனைத்து நிர்வாகிகளும் ஓபிஎஸ் பின்னால்தான் இருந்திருப்பார்கள்” என்றார்கள் ஆவேசத்துடன்.

-வணங்காமுடி