அதிமுக அலுவலகத்துக்கு வந்த எடப்பாடி : செண்டை மேளத்துடன் வரவேற்பு!

Published On:

| By christopher

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வான பிறகு இன்று முதன் முறையாக அதிமுக தலைமை அலுவலகத்திற்கு எடப்பாடி பழனிசாமி வந்தார்.

கடந்த ஜூலை மாதம் சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில்,

’அ.தி.மு.க.வில் ஜூன் 23- ஆம் தேதிக்கு முந்தைய நிலையே தொடர வேண்டும்’ என தனி நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார்.

அதிமுக பொதுக்குழு செல்லும்!

இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.

இதனை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு, ’கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என தனி நீதிபதி ஜெயச்சந்திரன் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து உத்தரவு’ பிறப்பித்தனர்.

தற்போது இரு நீதிபதிகள் அடங்கிய தீர்ப்பினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து தங்கள் தரப்பை விசாரிக்காமல் எந்த உத்தரவும் விதிக்கக்கூடாது என இபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுதாக்கல் செய்தது.

admk gs edappadi palanisamy

2 மாத காலத்திற்கு பின் இபிஎஸ் வருகை!

நீதிமன்றங்களில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், கடந்த ஜூலை மாதம் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி முதன்முறையாக அதிமுக தலைமை அலுவலத்திற்கு இன்று வந்தார்.

இதனை முன்னிட்டு அலுவலக வளாகத்தில், ‘எங்கள் சாமி எடப்பாடி பழனிசாமி’ உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

பசுமை வழிச்சாலை இல்லத்தில் இருந்து தலைமை அலுவலகத்திற்கு புறப்பட்ட அவருக்கு வழிநெடுகிலும் அதிமுக தொண்டர்கள் கோஷம் எழுப்பி மலர்தூவி வரவேற்றனர்.

admk gs edappadi palanisamy

கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு பிறகு தலைமை அலுவலகத்திற்கு வந்த அவரை வரவேற்பதற்காக, அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கட்சி தலைமை அலுவலகத்தில் ஏற்கனவே குவிந்து காத்திருந்தனர்.

அலுவலக வாசலுக்கு எடப்பாடியின் கார் வந்ததும் செண்டை மேளத்தின் சத்தமும், தொண்டர்களின் கோஷமும் காதை பிளந்தன.

அவர் காரை விட்டு இறங்கியதும் தொண்டர்கள் சூழ்ந்து கொண்டனர். தொண்டர்கள் புடைசூழ அலுவலகத்துக்குள் நுழைந்த அவர் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திவிட்டு உள்ளே சென்றார்.

கடும் நெரிசலில் சிக்கிய அவரைச் சுற்றியும் நின்று கொண்டு பாதுகாப்பாக உள்ளே அழைத்து சென்றனர் அவரது பாதுகாவலர்கள். அவருக்கு பின்னால், கே.பி.முனுசாமி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் சென்றனர்.

நேற்று அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் நேரடி விசாரணை நடத்தினர்.

இன்று எடப்பாடி பழனிசாமி அலுவலகத்துக்கு செல்லக் கூடாது என்று டிஜிபியிடம் ஓபிஎஸ் தரப்பில் மனு கொடுக்கப்பட்டது. இந்த பரபரப்புக்கு மத்தியில் அலுவலகத்துக்குள் சென்றுள்ளார் எடப்பாடி.

கிறிஸ்டோபர் ஜெமா

சேலம் மாவட்டத்தில் அதிமுகவின் ஆட்சி தான்: எடப்பாடி பழனிசாமி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share