அதிமுக பொதுச்செயலாளர்: சசிகலா மனு விசாரணை!

Published On:

| By Kavi

அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கியது செல்லும் என்ற சென்னை உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக சசிகலா தொடர்ந்த மேல்முறையீட்டு மனு இன்று (நவம்பர் 8) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலாவும், துணைப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்குச் சென்ற பின் 2017 செப்டம்பர் 12ஆம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்நிலையில் அன்றைய தினம் பொதுக்குழுக் கூட்டத்தில் இயற்றப்பட்ட 12 தீர்மானங்களைச் செல்லாது என்று அறிவிக்கக் கோரி சென்னை மாவட்ட நான்காவது கூடுதல் உரிமைகள் நீதிமன்றத்தில் சசிகலா மற்றும் தினகரன் இருவரும் வழக்கு தொடர்ந்தனர்.

இதில் டிடிவி தினகரன் அமுமுக கட்சியைத் தொடங்கியதால் இந்த வழக்கிலிருந்து விலகினார். இந்த சூழலில் சசிகலாவின் வழக்கை நிராகரிக்கக் கோரி ஓ பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் சசிகலாவின் மனுவை உரிமையியல் நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டது. 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும் தெரிவித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து சசிகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

அதில், முழுமையாக விசாரணை நடத்தாமல் உரிமையியல் நீதிமன்றம் தனது மனுவை நிராகரித்துள்ளது. எனது தரப்பு வாதங்களை முழுமையாகக் கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார். ஆரம்ப நிலையிலே உரிமையில் நீதிமன்றம் எனது மனுவை நிராகரித்து விட்டதால் இந்த வழக்கு குறித்து விரிவாக விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த வழக்கு கடந்த நவம்பர் 4ஆம் தேதி நீதிபதி சௌந்தர் முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது சசிகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜகோபால் அதிமுக பொதுச்செயலாளரான சசிகலா ஒப்புதல் இல்லாமல் ஓ பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு செல்லாது என்று வாதிட்டார்.

இந்த வாதத்தை கேட்ட நீதிபதி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்திருந்தார்.

இந்நிலையில் சசிகலாவின் மேல்முறையீட்டு மனு மீண்டும் இன்று (நவம்பர் 8) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டியலிடப்பட்டுள்ளது.
பிரியா

டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க!

வேலைவாய்ப்பு : பாரதிதாசன் பல்கலையில் பணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel