அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நீண்ட சட்டப்போராட்டத்துக்கு பிறகு இந்தியத் தேர்தல் ஆணையத்தால் எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிக்கப்பட்டார்.
இதை எதிர்த்து அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிசாமி ஆகியோர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி மனு தாக்கல் செய்தனர்.
அதில், “தேர்தல் ஆணையம் 2010ஆம் ஆண்டு வெளியிட்ட விதிகளுக்குப் புறம்பாக, கழக சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதிமுக தொடர்பான வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றம், சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன. இந்த வழக்குகளின் இறுதித் தீர்ப்பு வரும் வரை அதிமுக விதிகளை மாற்றக்கூடாது.
எனவே பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்ததை ரத்து செய்ய வேண்டும்” என கோரியிருந்தனர்.
இந்த மனுவை இன்று (மே 4) விசாரித்த நீதிபதி புருஷேந்திரகுமார் கவுரவ், ராம்குமார் ஆதித்தன். சுரேன் பழனிசாமி மனு தொடர்பாக 6 வாரத்தில் பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் நோட்டீஸ் அனுப்பி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளார்.
பிரியா
முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறந்த மனிதர்: ஆளுநர் பேட்டி!
திராவிட மாடல் – அனைத்து மாநிலங்களுக்குமான ஃபார்முலா: மு.க.ஸ்டாலின்