அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்த வழக்கில் இன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்குத் தடை விதிக்க கோரியும் பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி பிரபாகர் வைத்தியலிங்கம் உள்ளிட்டோர் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கின் மீதான விசாரணை கடந்த மார்ச் 22ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு முன்பு நடந்தது. சுமார் 7 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
ஈபிஎஸ், ஓபிஎஸ் தரப்பில் காரசார வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.
இவ்வழக்கில் இன்று (மார்ச் 28) தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று அறிவித்தது. இதனால் யாருக்குச் சாதகமாகத் தீர்ப்பு வரும் என்ற எதிர்பார்ப்பும், பரபரப்பும் அதிமுகவில் நிலவி வரும் நிலையில், ஓ.பன்னீர் செல்வம் நேற்று இரவு தேனியிலிருந்து சென்னை வந்தார்.
முதலில் தேனியிலிருந்து மதுரை வந்த அவர், அங்கிருந்து விமானம் மூலம் மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு வந்தடைந்தார்.
அப்போது செய்தியாளர்கள் அவரிடம், பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் வழக்கில் தீர்ப்பு வெளியாக இருக்கிறதே என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு, நீங்கள் தான் சொல்ல வேண்டும், தீர்ப்பு உங்கள் கையில் தான் இருக்கிறது என்று சிரித்தபடி கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.
பிரியா
சூரிய நமஸ்காரம் செய்யும் சிறுத்தை: வீடியோ வைரல்!