அதிமுக பொதுக் குழு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், உயர்நீதிமன்றத்தில் இன்று (ஜூன் 15) ஓபிஎஸ் தரப்பின் பதில் வாதம் மீதான விசாரணை நடைபெறுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்பட்டு எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையிலும், அதிமுக பொதுக் குழு வழக்கு தொடர்பாக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதிமுக பொதுக் குழுவில் ஓபிஎஸ்ஸை நீக்குவது, அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடியை தேர்வு செய்வது போன்ற தீர்மானங்கள் கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி எடுக்கப்பட்டன.
இத்தீர்மானங்களை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீட்டு மனுக்களை தொடர்ந்தது. பின்னர் பொதுக்குழு வழக்குடன் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்கையும் ஓபிஎஸ் அணி தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது.
கடந்த 12 ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில், இபிஎஸ் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. அப்போது கட்சி விதிப்படி, ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கியுள்ளோம், அவரை மீண்டும் கட்சியில் சேர்த்தால் குழப்பம் அதிகரிக்கும். கட்சி விதிகள் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டவை அல்ல. காலத்திற்கு ஏற்ப கட்சி விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என வாதிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை ஜூன் 15-ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது.
இந்நிலையில் எடப்பாடி தரப்பு வாதத்தை தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பில் இன்று தங்களது பதில் வாதத்தை முன்வைக்க உள்ளனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
செந்தில்பாலாஜியின் இதயம்: ரிப்போர்ட் இதுதான்!
TNPL: டிஆர்எஸ் முறையீடு செய்தது ஏன்? அஸ்வின் விளக்கம்!