அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்சில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மேல்முறையீடு செய்திருந்தனர்.
இந்த வழக்கில் ஓ.பன்னீர் செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் வாதங்கள் நிறைவடைந்த நிலையில் மேல்முறையீட்டு வழக்கை ஜூன் 8-ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இந்தநிலையில் மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை இன்று (ஜூன் 8) நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அதிமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் ஆஜராகி, “கட்சி விவகாரங்கள் தொடர்பாக பொதுக்குழு எடுக்கும் முடிவே இறுதியானது. கட்சியின் அனைத்து முடிவுகளையும் அடிப்படை தொண்டர்களிடம் கேட்டு எடுக்க முடியாது. ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க பொதுக்குழுவிற்கு அதிகாரம் உள்ளது.
கட்சி விதிகளை மீறினால் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் மீதே நடவடிக்கை எடுக்க முடியும். கட்சியின் விதிகளுக்கு மேலானவர்கள் யாருமில்லை. அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் கட்சி விதிகளுக்கு கட்டுப்பட்டவர்கள்.
ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளரை விட உட்சபட்ச அதிகாரம் கொண்டது பொதுக்குழு. தமிழகம் முழுவதும் தனியாக நிர்வாகிகளை நியமித்து வரும் ஓபிஎஸ் எப்படி கட்சியில் இருந்து நீக்கியதை எதிர்த்து நிவாரணம் கோர முடியும்.
கட்சியின் செயல்பாட்டை முடக்க வேண்டும் என்ற நோக்கில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று வாதம் முன்வைக்கப்பட்டது.
அதிமுக தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணையை நாளை ஒத்திவைத்தனர்.
செல்வம்
‘ஆளுநர் கட்சி உறுப்பினர் போல் செயல்படுகிறார்’ – செல்லூர் ராஜூ