எடப்பாடிக்கு வெற்றி : பொதுக்குழு செல்லும் -உயர்நீதிமன்றம் அதிரடி!

அரசியல்

அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுவதாக 2 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

ஜூலை 11ஆம் தேதி சென்னையை அடுத்த வானகரகத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில்  பொதுக்குழுக்கூட்டம் நடத்தப்பட்டது.

அதில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதாகவும், அவைத்தலைவராக தமிழ் மகன் உசேன் நியமிக்கப்பட்டதாகவும், ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்குவதாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதனை எதிர்த்து  ஓ.பன்னீர்செல்வம் , அதிமுக நிர்வாகி வைரமுத்து ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை  விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், “ஜூலை 11ம் தேதி நடைபெற்ற கட்சியின்  பொதுக்குழு செல்லாது என்றும், ஜூன் 23-ஆம் தேதிக்கு முன்னர் இருந்த நிலையே தொடரும்”  என்றும் தீர்ப்பளித்தார்.

மேலும்,  கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் புதிய பொதுக்குழுவை  நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இவ்வழக்கு நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் அமர்வு விசாரித்தது. அப்போது, எடப்பாடி பழனிச்சாமி சார்பில் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் சி.எஸ்.வைத்தியநாதன், ஆரியமா சுந்தரம் மற்றும் விஜய் நாராயண் ஆகியோர், தனி நீதிபதியின் தீர்ப்பில் பல்வேறு தவறுகள் இருப்பதாக வாதிட்டனர்.

ஜூலை 11 ஆம் தேதி நடத்தப்பட்ட பொதுக்குழுவுக்கு ஜூலை 1 ஆம் தேதியே நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும், அதிகாரம் பெற்றவர் பொதுக்குழுவை கூட்டவில்லை என்று தனி நீதிபதி  கூறியுள்ளது தவறு என்றும் தெரிவித்தனர்.

ஒன்றரை கோடி உறுப்பினர்களின் எண்ணத்தை 2500 பொதுக்குழு உறுப்பினர்கள் பிரதிபலித்தார்களா என தனி நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளது யூகத்தின் அடிப்படையிலானது எனவும் குறிப்பிட்டனர்.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து செயல்பட வாய்ப்பே இல்லை என்றும், தனி நீதிபதி உத்தரவால் அதிமுக கட்சி நடவடிக்கைகள் முடங்கவிட்டதாகவும் குற்றம் சாட்டினர்.

அதன்பிறகு ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் குரு கிருஷ்ணகுமார் மற்றும் அரவிந்த் பாண்டியன், அடிப்படை உறுப்பினர்களை விட பொதுக்குழு உறுப்பினர்களே மேலானவர்கள் என்ற எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதத்தை ஏற்க முடியாது என்று வாதிட்டனர்.

அடிப்படை உறுப்பினர்களால் பொதுச் செயலாளரை தேர்வு செய்யும் ஒரே கட்சி அதிமுக தான் எனவும், இது சம்பந்தமான விதியை கொண்டு வருவதில் எம்.ஜி.ஆர். உறுதியாக இருந்ததாகவும் தெரிவித்தனர்.

 மேலும், தலைமைக்கழகத்தின் பெயரில் தான் பொதுக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதே தவிர,  ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அனுப்பவில்லை.

கட்சி விதிகளின்படி ஒருங்கிணைப்பாளர்,  இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே பொதுக்குழுவை கூட்ட முடியும் என்பதால் ஜூலை 11ஆம் தேதி நடந்த கூட்டத்துக்கு அனுப்பிய நோட்டீஸ் செல்லாதது எனவும் வாதிட்டனர்.

சஸ்பெண்ட் உள்ளிட்ட நடவடிக்கைகளால் தகுதி நீக்கம் ஆகியிருந்தால் மட்டுமே பதவிகள் காலியானதாக கூறலாம்.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை அடிப்படை உறுப்பினர்கள் தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

பொதுக்குழுவில் ஒப்புதல் பெறாவிட்டால் பதவிகள் காலியாகி விடும் என கட்சி விதிகளில் கூறப்படவில்லை என்றும் ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் துரைசாமி,சுந்தர் மோகன் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தனர்.

இந்தநிலையில் இன்று (செப்டம்பர் 2) காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று தகவல் வெளியானது. அதன்படி நீதிபதிகள் இருவரும் 10.20 மணியளவில் நீதிமன்றத்துக்கு வந்தனர்.

சுமார் 10.40 மணிக்கு 2 நீதிபதிகள் தங்களது தீர்ப்பை வாசித்தனர். அதில் தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டனர். இதன் மூலம் அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதும் செல்லும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

கலை.ரா

தி.மு.க ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை: எடப்பாடி

+1
0
+1
1
+1
0
+1
2
+1
0
+1
1
+1
0

1 thought on “எடப்பாடிக்கு வெற்றி : பொதுக்குழு செல்லும் -உயர்நீதிமன்றம் அதிரடி!

Leave a Reply

Your email address will not be published.