அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்கில் ஓபிஎஸ் ஈபிஎஸ் தரப்பில் காரசார வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இன்று (மார்ச் 22) காலை 10.30 மணிக்குத் தொடங்கி அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்குகள் மீதான விசாரணை நடந்து வருகிறது.
காலையில் நடந்த விசாரணையின் போது ஓபிஎஸ் தரப்பில், “பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி மட்டும் போட்டியிடும் வகையில் விதிகள் திருத்தப்பட்டிருப்பதாகவும், அந்த நிபந்தனை நீக்கப்பட்டால் தானும் பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்” என்றும் முக்கிய வாதம் முன்வைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து மதியம் 2.15 மணிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மதிய உணவு இடைவேளைக்கு பிறகு மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அப்போது ஓபிஎஸ் ஆதரவாளர்களான வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. வைத்திலிங்கம் தரப்பில் வழக்கறிஞர் மணி சங்கர் ஆஜராகி வாதிட்டார்.
பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். எந்த காரணத்துக்காகவும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டது என்ற பேச்சுக்கே இடமில்லை.
அமைச்சர், எம்.எல்.ஏ. எம்.பி. என பல்வேறு பொறுப்புகளை வகித்த தன்னைகூட விளக்கம் கேட்காமல் நீக்கியுள்ளனர் என வைத்திலிங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஜேசிடி பிரபாகர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் வாதங்களை முன்வைத்தார்.
“கட்சியில் இருந்து நீக்கும் முன் எந்த விளக்கமும் கேட்கப்படவில்லை, நோட்டீஸ் கொடுக்கப்படவில்லை.
பொதுகுழு வழக்கை பொறுத்தவரை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய 15 நாட்களில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனால் நீதிமன்றத்தை அணுகியதிலும் எந்த தாமதமும் இல்லை” என்று வாதிட்டார் வழக்கறிஞர் ஸ்ரீராம் .
ஓபிஎஸ் தரப்பு வாதங்களைத் தொடர்ந்து ஈபிஎஸ் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டு வருகிறது.
“தாங்கள் தான் உண்மையான கட்சி என்றால் தேர்தல் ஆணையத்தில், மக்கள் மன்றத்தில் தங்களின் பலத்தை நிரூபிக்க வேண்டும்.
ஓபிஎஸ் தனி கட்சியை நடத்தி வருகிறார். அவர் எங்களை நீக்கி புதிய நிர்வாகிகளை நியமித்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமிதான் இடைக்கால பொதுச்செயலாளர் என உலகிற்கே தெரியும்.
பொதுக்குழு முடிவுகளே இறுதியானது. இந்த முடிவுக்கு கட்டுப்பட்டவர்கள் தான் கட்சியில் இருக்க முடியும்” என்று ஈபிஎஸ் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டு வருகிறது.
பிரியா
மணீஷ் சிசோடியாவுக்கு மேலும் 2 வாரம் நீதிமன்றக் காவல்!
வாக்காளர் அட்டை – ஆதார் இணைப்பு: இறுதி அவகாசம் எப்போது?