”அதிமுகவும் பொதுக்குழு சர்ச்சைகளும் பிரிக்க முடியாது போல, மீண்டும் பொதுக்குழு கூடுகிறதே?” என்ற கேள்வி இன்பாக்சில் வந்து விழுந்தது.
அதைப் பார்த்து தனது பதிலை மெசேஜாக டைப் செய்யத் தொடங்கியது வாட்ஸ் அப்.
“டிசம்பர் 26 ஆம் தேதி சுனாமி தினத்தன்று அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் மிகப் பெரும்பான்மையான ஆதரவோடு சட்டப் போராட்டத்திலும் பல கட்ட வெற்றி பெற்று பொதுச்செயலாளராக பொதுக்குழுவைக் கூட்டுகிறார்.
பொதுவாக பொதுக்குழுவுக்கு சிறப்பு அழைப்பாளர்களுக்கும் அழைப்பு கொடுப்பார்கள். ஆனால் நாளை நடைபெறபோகும் பொதுக்குழு கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களுக்கு அனுமதி இல்லை.
பொதுக்குழு உறுப்பினர்கள், தலைமை கழக நிர்வாகிகளுக்கு மட்டும் சுமார் 2800 அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளது. அழைப்பு உள்ளவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.
மொத்தம் 16 நுழைவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளது, எந்தெந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எந்தெந்த நுழைவாயில் வரவேண்டும் என்று அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் அந்தந்த நுழைவாயிலில் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பொதுக்குழு உறுப்பினர்கள் என்ற பெயரில் உளவுத்துறையினர் உள்ளே வந்து விடக்கூடாது என முன்னெச்சரிக்கை என்கிறார்கள் அதிமுக மூத்த நிர்வாகிகள்.
பொதுக்குழு நடைபெறும் தனியார் திருமண மண்டபத்தில் சைவம் மற்றும் அசைவ சமையல் காரார்கள் இன்று டிசம்பர் 25 ஆம் தேதியே குவிந்து விட்டனர். நாளை காலை டிபன் மதியம் சாப்பாடு என ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கிரீன் வேஸ் சாலையில் அவர் வசிக்கும் இல்லத்திலிருந்து வானகரம் வரையில் அசத்தலான வரவேற்புகள் கொடுக்க பெஞ்சமின், தி நகர் சத்யா, விருகம்பாக்கம் ரவி, ஆதிராஜாராம், ராஜேஷ், பாலகங்கா போன்ற நிர்வாகிகள் போட்டி போட்டுக்கொண்டு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். ஆனால் வெள்ள பாதிப்புகள் பற்றிய பேச்சு தீவிரமாக இருக்கும் நிலையில் ஆடம்பர வரவேற்புகள் வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளாராம் எடப்பாடி.
பொதுக்குழு வெளியிடும் அரசியல் செய்தி என்ன என்பதுதான் முக்கியமான எதிர்பார்ப்பு.
தீர்மானங்கள் பொறுத்தவரையில், தேர்தல் ஆணையத்திடம் வழங்குவதற்காக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதை உறுதி செய்யும் ஏ படிவத்தில் கையெழுத்து போடும் அதிகாரம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு என முக்கிய தீர்மானம் நிறைவேற்ற உள்ளனர். இதற்கு காரணம் பன்னீர்தான் என்கிறார்கள் அதிமுக வட்டாரங்களில்.
காரணம் என்னவென்றால்… சில நாட்களுக்கு முன் தனது ஆதரவு நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டினார் பன்னீர். அப்போது அவர், ‘ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் நாமும் போட்டியிட்டோம். அப்போது இரட்டை இலை சின்னம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டுக்கு போனார் எடப்பாடி. அப்போது அந்த இடைத் தேர்தலுக்கு மட்டும் சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி தேர்தல் ஆணையத்தின் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடிக்கு கிடைத்தது. நாமும் போட்டியில் இருந்து விலகிக் கொண்டோம். ஆனால், வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடிக்கு இரட்டை இலை அவ்வளவு எளிதாக கிடைக்காது. அதனால் நம்பிக்கையாக இருங்கள்’ என்று சொல்லியிருக்கிறார்.
பன்னீர் தரப்பின் மூலமே இந்தத் தகவல் எடப்பாடிக்கு வர, பொதுக் குழுவில் அதிமுக வேட்பாளர்களுக்கு அங்கீகாரம் தரும் அதிகாரம் எடப்பாடிக்கே என்று தீர்மானம் நிறைவேற்றி உடனடியாக தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பவு முடிவு செய்யப்பட்டுள்ளது.
திமுக ஆட்சிக்கு எதிரான தீர்மானங்களும், நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பான தீர்மானங்களும், வெள்ள நிவாரணம் கூடுதலாக கொடுக்க வேண்டும் போன்ற தீர்மானங்களும் தயாரிக்கப்பட்டுள்ளது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிசம்பர் மாதத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பது ஏன்?
தமிழ்நாட்டை விட உபி முன்னேறிடுச்சா? அண்ணாமலை கண்ணில் படும் வரை ஷேர் செய்யவும்: அப்டேட் குமாரு