விபத்தில் சிக்கிய முன்னாள் அமைச்சர்களின் கார்கள்!

அரசியல்

தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்கச் சென்ற அதிமுக முன்னாள் அமைச்சர்களின் கார்கள் விபத்தில் சிக்கின.

இன்று (அக்டோபர் 30) தேவர் குருபூஜை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்துக்குக் காலை முதலே அரசியல் கட்சியினர் வருகை தந்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அரசு சார்பில் மூத்த அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பசும்பொன் செல்லவில்லை.

இந்நிலையில் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு ஈபிஎஸ் தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பசும்பொன் புறப்பட்டனர்.

இந்தச்சூழலில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது முன்னாள் அமைச்சர்களின் கார்கள் விபத்தில் சிக்கின.

முன்னாள் அமைச்சர்களான காமராஜ், பாஸ்கரன் , சி.விஜயபாஸ்கர் ஆகியோரது கார்கள் வைகை ஆற்றுப் பாலத்தில் சென்று கொண்டிருக்கும் போது முன் சென்ற கார்கள் மீது ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் முன்னாள் அமைச்சர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அவர்களுடன் பயணித்த மணிகண்டன், கல்யாணசுந்தரம், ஜோதிபாபு, தமிழ்செல்வன் உள்ளிட்ட 5 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

கார்கள் அடுத்தடுத்த வாகனங்கள் மீது மோதியதில் கார்களின் முன்பக்கம் சேதமடைந்தது. இதையடுத்து மாற்று வாகனத்தில் அனைவரும் புறப்பட்டுச் சென்றனர்.

இதுகுறித்து தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து பாலத்தின் மீது நிறுத்தப்பட்டிருக்கும் சேதமடைந்த கார்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பிரியா

தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் மரியாதை!

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத் துறை அறிவிப்பு!

+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *