அதிமுக பழனிசாமிக்கா? பன்னீருக்கா?: நாளை தீர்ப்பு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரபரப்புக்கு மத்தியில் நாளை (பிப்ரவரி 23) அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

அதிமுக பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மனுத் தாக்கல் செய்தார்.

நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் முன்பு ஜனவரி 4ஆம் தேதி தொடங்கி இறுதிக்கட்ட வாதங்கள் நடைபெற்றது.

ஓபிஎஸ் தரப்பில், “எடப்பாடி பழனிசாமிக்காக கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. பொதுக்குழுவை கூட்டுவதற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்குத் தான் அதிகாரம் உண்டு.

கடந்த ஜூன் 23ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் ஓபிஎஸ் கலந்துகொண்ட போது அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அதிமுக கட்சி விதிகளின் படி அவருக்கு பொதுக்குழுவை கூட்ட அதிகாரம் இல்லை. எனவே ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது. அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று உத்தரவிட வேண்டும்” என்று வாதிடப்பட்டது.

ஜனவரி 4ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் ஓபிஎஸ் தரப்பினர் வாதத்தை முன்வைத்த நிலையில் ஜனவரி 10ஆம் தேதிக்கு வழக்கை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

ஜனவரி 10ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த போது, எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதத்தை முன்வைத்தது.

“ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டதும் அதிமுக கட்சி விதிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டதும் பொதுக்குழு உறுப்பினர்களால் தான். அடிப்படை உறுப்பினர்களால் அல்ல.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகளை உருவாக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது என்றால், அதை ரத்து செய்யவும் அதிகாரம் இருக்கிறது.

பொதுக்குழுவை ஏற்கும் நபர்களே அடிப்படை உறுப்பினர்களாக இருக்க முடியும் என விதி 7 கூறுகிறது. இரட்டை தலைமையால் ஏற்பட்ட குழப்பத்தால் ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.

ஜூன் 23ஆம் தேதி நடந்த பொதுக்குழுவின் போது பொதுக்குழு உறுப்பினர்களால் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்கப்பட்டது. ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழுவின் போது 2460 உறுப்பினர்களில் 94.5சதவிகிதம் பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தனர்” என்று வாதிடப்பட்டது.

ஜனவரி 10ஆம் தேதி நடந்த விசாரணையைத் தொடர்ந்து ஜனவரி 11அம் தேதிக்கு வழக்கை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

அன்றைய தினம் விசாரணைக்கு வந்த போது, “உங்கள் கட்சி விவகாரம் தொடர்ந்து நீதிமன்றத்திலேயே நடந்து கொண்டிருந்தால் கட்சியை எப்படி கவனிப்பீர்கள்?. அதிமுகவில் பொதுக்குழு தொடர்பான சந்தேகங்களுக்கு கட்சியின் சட்ட விதிகளில் தெளிவான புரிதல் இல்லை.

இரு பதவிகளில் இருப்பவர்களில் ஒருவருக்கு அதில் தொடர விருப்பம் இல்லையென்றால், அல்லது அந்த ஒருவர் மட்டும் பதவி விலகினால் அல்லது ஒருவருக்கு தகுதி இல்லையென்றால் அதன் பின் தலைமையின் நிலை என்ன? என்று கேள்வி எழுப்பினர்.


மேலும் அனைத்து தரப்பினரும் இறுதி கட்ட எழுத்துபூர்வ வாதங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் நாளை (பிப்ரவரி 23) அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம். அதிமுக பன்னீருக்கா அல்லது பழனிசாமிக்கா என்பது நாளை தெரிந்துவிடும்.

முன்னதாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது. சின்னத்திற்கான படிவத்தில் தமிழ் மகன் உசேன் கையெழுத்திட தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா

‘கார்ல் மார்க்ஸ்’: ஆளுநருக்கு பொன்முடி கண்டனம்!

நேற்று திருமா… நாளை சீமான்… அண்ணாமலைக்கு எதிராக காயத்ரி ரகுராமின் பக்கா ப்ளான்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts