ADMK executive killed.. Relatives protest: Edappadi condemned!

அதிமுக நிர்வாகி கொலை : எடப்பாடி கண்டனம்!

அரசியல்

சேலம் கொண்டலாம்பட்டியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி சண்முகம் நேற்று (ஜூலை 3) இரவு மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டும், குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படாத நிலையில் அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் சண்முகம் கொலையில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி அதிமுக பொதுச்செயலாளர் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

அவர், “சேலம் மாநகர் மாவட்டம், கொண்டலாம்பட்டி பகுதிக் கழகச் செயலாளர் ஆ. சண்முகம் நேற்று இரவு அவரது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது அங்கே மறைந்திருந்த கொலையாளிகள் அவரை வழிமறித்து கொடூரமாகப் படுகொலை செய்துள்ளனர். இவருக்கு மனைவி, திருமணமான மகள் மற்றும் மகன் ஆகியோர் உள்ளனர்.

சண்முகம் தனது சிறு வயதிலேயே கழகத்தில் இணைந்து, சேலம் மாநகர் மாவட்டம், 55-ஆவது வட்டக் கழகச் செயலாளராகவும், தொடர்ந்து 22 ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டலாம்பட்டி பகுதிக் கழகச் செயலாளராகவும் திறம்பட பணியாற்றியவர்.

மேலும், 2001-2006 மற்றும் 2011-2016 என்று இருமுறை சேலம் மாநகராட்சி, கொண்டலாம்பட்டி மண்டலக் குழுத் தலைவராக திறம்பட பணியாற்றி உள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் என அனைத்துத் தேர்தல்களிலும் முழு ஈடுபாட்டுடன் கழகப் பணியாற்றி மக்களிடத்திலும், கட்சித் தொண்டர்களிடத்திலும் அன்பாகப் பழகி நன்மதிப்பைப் பெற்றவர்.

அப்படிப்பட்ட ஒரு சிறந்த தொண்டரை இன்று நாம் இழந்துள்ளது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளது. தினசரி கொலை, கொள்ளை நடைபெறுவது வாடிக்கையாக உள்ளது என்று பலமுறை நான் கூறியபோதும், இந்த திமுக அரசு சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை.

இச்சம்பவத்திற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். இக்கொலைக் குற்றத்தில் சம்பந்தப்பட்ட அனைத்துக் குற்றவாளிகளையும் உடனடியாகக் கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

கழகத்தின் தீவிர விசுவாசி அன்புச் சகோதரர் சண்முகத்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையே சண்முகம் கொலை வழக்கு தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில் அயோத்திய பட்டினம் பகுதியில் பதுங்கியிருந்த 6 பேர் மற்றும் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் லாட்டரி சதீஷ் என 8 பேரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

இதனால்தான் சினிமாவை விட்டு விலகினேன்: மாளவிகா ஓபன் டாக்!

திருமண நாளில் தோனிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சாக்‌ஷி

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *