அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.11 லட்சம் வாங்கி ஏமாற்றியதாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அ.தி.மு.க. ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கரின் உதவியாளராக இருந்தவர் ரவி. இவர் தலைமைச் செயலக ஊழியரும் கூட.
இவர் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.11 லட்சம் வாங்கி மோசடி செய்ததாக ராணிப்பேட்டையை சேர்ந்த முத்துலட்சுமி என்ற பெண் மத்திய குற்றப் பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்திருந்தார்.
அவரது புகாரில், “அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளரான ரவி, அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.11 லட்சம் பணம் வாங்கினார். ஆனால் சொன்னபடி அரசு வேலையை அவர் வாங்கி தரவில்லை.
அதனால் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்தார். எனவே என்னை ஏமாற்றி மிரட்டல் விடுக்கும் ரவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
முத்துலட்சுமியின் புகார் மீது விசாரணை நடத்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.
அதன்படி மத்திய குற்றப்பிரிவின் வேலை மோசடி தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் ரவி பண மோசடி செய்தது உறுதியானது. இதனையடுத்து விஜயபாஸ்கரின் உதவியாளரான ரவி மற்றும் ஓட்டுநர் விஜய் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இதில் தரகராக செயல்பட்ட ஹனீபா என்பவரை தேடி வரும் போலீசார், விரைவில் கைது செய்ய உள்ளனர்.
கைதான ரவி தற்போது தலைமை செயலகத்தில் ஆதி திராவிட நலத்துறையில் உதவி பிரிவு அலுவலராக பணிபுரிந்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2021ம் ஆண்டு ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி உட்பட அவரின் உதவியாளர்கள், அ.தி.மு.க நிர்வாகிகள் மீது கடந்த 2021-ம் ஆண்டு விருதுநகர் குற்றப்பிரிவில் வழக்கு பதிவுசெய்யப்பட்டது.
பின்னர் திடீரென தமிழகத்திலிருந்து 20 நாட்களுக்கும் மேலாக தலைமறைவான கே.டி.ராஜேந்திர பாலாஜி கர்நாடகாவில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் அதே போன்று தற்போது பணமோசடி புகார் தொடர்பாக முன்னாள் அமைச்சரின் விஜயபாஸ்கரின் உதவியாளர் கைது செய்யப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இதன் அடுத்த கட்டமாக விஜயபாஸ்கரையும் இந்த விவகாரத்தில் சிக்க வைக்க சட்ட ரீதியான வாய்ப்புகள் இருப்பதாகவும் தலைமைச் செயலக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
மணீஷ் சிசோடியாவுக்கு மேலும் 2 நாள் சிபிஐ கஸ்டடி!
வதந்தி பரப்பினால் 7 ஆண்டுகள் சிறை: டிஜிபி எச்சரிக்கை!