தமிழகத்தில் கூட்டணி இல்லாமல் ஆட்சிக்கு வரமுடியாது என்ற நிலை வந்துவிட்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இன்றும் (நவம்பர் 22) நாளையும் திண்டுக்கலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாடு நடைபெறுகிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்வதற்காக கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் திண்டுக்கல் வந்திருந்தனர்.
அப்போது திண்டுக்கலில் செய்தியாளர்களைச் சந்தித்த கே.பாலகிருஷ்ணன், “தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளும் பெரிய கட்சிகளாக இருந்தாலும் கூட்டணி இல்லாமல் வெற்றி பெறவோ, ஆட்சிக்கு வரவோ முடியாது என்ற நிலை வந்துவிட்டது.
கூட்டணி இல்லாமல் யாரால் ஆட்சிக்கு வர முடியும். பல நேரங்களில் பல பேர் கூட்டணியில் சேர்வார்கள். கூட்டணியில் சேர்பவர்கள் எல்லோரும் பணம் கேட்கிறார்கள் என்று பொத்தாம் பொதுவாக சொல்ல முடியாது.
யார் கூட்டணியில் சேர்கிறார்கள், யார் பணம் கேட்டார்கள் என்று வெளிப்படையாக சொல்வது நல்லது” என்று கூறினார்.
முன்னதாக திருச்சியில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “யார் இப்போதெல்லாம் சும்மா வருகிறார்கள்? கூட்டணிக்கு வருபவர்கள் எல்லாம் ’20 சீட் கொடுங்க, ரூ.50 கோடி தாங்க, ரூ.100 கோடி தாங்க’ என கேட்கின்றனர்” என்று கூறியிருந்தார்.
இதுதொடர்பான கேள்விக்கு , பணம் கேட்டவர்கள் குறித்து வெளிப்படையாக கூற வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் கூறினார்.
மேலும் அவர், “2026 தேர்தலில் கூட்டணி மாறும் என்று யூகத்தின் அடிப்படையில் பலரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அதைப்பற்றி இப்போது நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. கூட்டணி மாறும் என்பதற்கு இப்போதைக்கு எந்த முகாந்திரமும் இல்லை.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு, கூட்டணி இல்லை என்பதால் தான் தோல்வி ஏற்பட்டது என்று சில அதிமுக தலைவர்கள் சொல்கிறார்கள். மீண்டும் கூட்டணியாக சேர வேண்டும் என்று சொல்கிறார்கள்.
ஆனால் அதிமுக என்ன முடிவு செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதேசமயம் பாஜகவோடு அதிமுக மீண்டும் கூட்டணிக்கு போனால், அதிமுக என்ற கட்சியே இருக்க வேண்டிய அவசியமே இல்லை” என்று குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
குடியரசுத் தலைவரை வரவேற்க செந்தில் பாலாஜியை அனுப்பலாமா? ஸ்டாலின் நடத்தும் ஆலோசனை!
பதினெட்டாம்படியில் நிற்கும் சிங்கம் : யார் இவர்?