அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (ஜனவரி 31) நடந்த 4 மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி முக்கிய முடிவை எடுத்து உள்ளார்.
2026 தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் மாவட்டம் தோறும் சென்று ஆய்வு பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட செயலாளர்களும் கூட்டம் நடத்துவது, ஆய்வுக் குழுவினருடன் ஆலோசனை மேற்கொள்வது ஆகிய பணிகளில் ஈடுபட்டு வருகிறார். admk district secretaries meeting
இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (ஜனவரி 31) சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

சென்னையில் ஆய்வுக் கூட்டம்! admk district secretaries meeting
இதை முன்னிட்டு காலை 10.30 மணிக்கு தலைமை அலுவலகத்துக்கு வருகைத் தந்த பொதுச்செயலாளார் எடப்பாடி பழனிசாமிக்கு கட்சித் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கட்சி நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, பொன்னையன், ஜெயக்குமார், பா.வளர்மதி, மாதவரம் மூர்த்தி , மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆதி ராஜாராம், ராயபுரம் மனோ, கே.பி. கந்தன், பாலகங்கா, வெங்கடேஷ்பாபு, தி.நகர் சத்யா, ஆர்.எஸ்.ராஜேஷ் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் சென்னையை தவிர்த்து தமிழ்நாடு முழுவதும் பிற மாவட்டங்களிலும் நடத்தப்பட்ட ஆய்வு கூட்டத்தின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து சென்னையில் ஆய்வுக்கூட்டம் நடத்த எடப்பாடி பழனிசாமி பார்வையாளர்களை நியமித்தார்.
பிப்ரவரி 4ஆம் தேதி காலை வட சென்னை வடக்கு ( கிழக்கு) கள ஆய்வு கூட்டமும், மாலை வட சென்னை வடக்கு(மேற்கு) கள ஆய்வு கூட்டமும் நடைபெறுகிறது. இதில் பார்வையாளராக அதிமுக தலைமை நிலைய செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி கலந்துகொள்வார். அதே நாளில் மாலை 4 மணிக்கு, தென் சென்னை தெற்கு (கிழக்கு) ஆய்வு கூட்டத்தில் அமைப்புச் செயலாளர் செம்மலை கலந்துகொள்வார்.
இதுபோல அன்றைய தினம் சென்னையில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், சி.விஜயபாஸ்கர், அமைப்புச் செயலாளர்கள் மோகன், சிங்காரம் ஆகியோரது தலைமையில் 9 இடங்களில் ஆய்வுக்கூட்டம் நடைபெறும் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
சலசலப்பு கூடாது admk district secretaries meeting

இன்றைய கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “ சென்னையில் நடக்கும் ஆய்வுக் கூட்டங்களில் எந்தவிதமான சலசலப்பும், கோஷ்டி பூசல்களும் வந்துவிடக்கூடாது. கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.
பெரிய கூட்டத்தை கூட்ட வேண்டாம். முக்கியமானவர்களை மட்டும் அழைத்து கூட்டத்தை நடத்துங்கள். அனைவரையும் பேச வைக்க வேண்டாம். குறிப்பிட்ட சிலரை மட்டும் பேச வையுங்கள். ஆய்வு கூட்டத்தில் சிறிய பிரச்சினை என்றால் கூட அது மீடியாக்களில் பூதாகரமாக காண்பித்து டேமேஜ் செய்துவிடுவார்கள்” என்று அறிவுறுத்தியிருக்கிறார்.
“இனி மாற்றுக்கட்சியில் இருந்து அதிமுகவில் இணைபவர்களுக்கு உடனடியாக பதவி வழங்கக்கூடாது. அதில் சில கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும். அதைப்பற்றி ஆலோசிப்போம்” என்று அதிமுகவில் இருந்த சி.டி.நிர்மல்குமார் தவெகவுக்கு தாவியதை மனதில் வைத்து பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
கடந்த மார்ச் 5, 2023 அன்று பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார் சி.டி.நிர்மல் குமார். அவர் அதிமுகவில் இணைந்த சில தினங்களிலேயே தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளர் பொறுப்பு கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி.
தற்போது, சி.டி.நிர்மல் குமார் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கும் நிலையில், புதிதாக கட்சியில் சேர்பவர்களுக்கு பதவி வழங்குவதில் கவனம் தேவை என்று தெரிவித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

அரசுக்கு எதிராக போராட்டம்! admk district secretaries meeting
மேலும் உங்கள் மாவட்டங்களில், மக்கள் பிரச்சினை, சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துங்கள். நான் வரவேண்டுமென்றாலும் என்னிடம் தெரியப்படுத்துங்கள், வருகிறேன்.
இதுபோன்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்த வேண்டும். admk district secretaries meeting
எனது ஆலோசனைப்படிதான், நான் சொல்வதைதான் அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசுவார். அதனால் அவர் விருப்பத்துக்கு பேசுகிறார் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். அவர் பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது நீங்கள் அவருடன் சேர்ந்து நில்லுங்கள்.
கள ஆய்வுக்குழுவினர் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு செல்லும் போது, சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த கட்சித் தலைமை செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், சார்பு அமைப்புகளின் மாநில துணை நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி கழக நிர்வாகிகள் என அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். இவர்கள் கலந்துகொள்வதை கள ஆய்வுக்குழுவினர் உறுதி செய்ய வேண்டும். admk district secretaries meeting
ஆய்வுக்குழு கூட்டத்தில் அனைவருக்கும் உறுப்பினர்கள் கார்டு சென்றுவிட்டதா என்று கவனிக்க வேண்டும் . அதற்கு தனி கவனம் செலுத்த வேண்டும்.
பூத் கமிட்டி சரியாக அமைக்கப்பட்டுள்ளதா? அதில் உள்ளவர்கள் சரியானவர்களா? அவர்கள் கொடுத்துள்ள தொடர்பு எண் சரியானதா என சரிப்பார்க்க வேண்டும். ஐடி விங் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்” என்று அறிவுரைகளை வழங்கியிருக்கிறார்.
ஈபிஎஸ் எடுத்த முடிவுக்கு காரணம்!
மற்ற மாவட்டங்களில் கள ஆய்வுக் கூட்டம் நடந்த போது அதிமுகவினருக்குள்ளே மோதல் போக்கும் சலசலப்பு ஏற்பட்டது. adm k district secretaries meeting
நெல்லையில் கடந்த நவம்பர் 22ஆம் தேதி எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில், மாவட்ட செயலாளர் கணேஷ்ராஜா தரப்பு ஆதரவாளர்களுக்கும் பாப்புலர் முத்தையா தரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உண்டானது.
அதே நாளில் கும்பகோணத்தில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, காமராஜ் ஆகியோர் கலந்துகொண்ட கூட்டத்திலும் தொண்டர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. இவை அனைத்தும் ஊடகங்களில் வெளியாகி அதிமுகவுக்கு மைனஸாக மாறியது.
நவம்பர் 25ஆம் தேதி மதுரை திருப்பரங்குன்றத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், செம்மலை, செல்லூர் ராஜு ஆகியோரின் முன்னிலையில் கட்சி நிர்வாகிகள் ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இந்த ஆய்வு ரிப்போர்ட்டுகளை எல்லாம் பார்த்துதான் எடப்பாடி பழனிசாமி, ஆய்வுக் கூட்டங்களில் எந்தவிதமான சலசலப்பும், கோஷ்டி பூசல்களும் வந்துவிடக்கூடாது என்று கூறியிருக்கிறார். admk district secretaries meeting