அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெறுகிறது.
அதிமுகவில் பிளவு ஏற்பட்டதற்கு பிறகு, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் தனித்தனியாக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துவது வழக்கமாகிவிட்டது.
அண்மையில் ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று அறிவித்து தனியார் மண்டபத்தில் நடத்தினார். இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியும் ஒரு ஆலோசனைக்கூட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்து இன்று(டிசம்பர் 27) சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி வருகிறார்.
இதில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைப்புச்செயலாளர்கள், செய்தி தொடர்பாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை ஜனவரி 4ம் தேதி வரவுள்ளது குறித்தும், சட்ட ரீதியான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள், தேர்தல் ஆணையத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.
மேலும், ஜனவரி 9ம் தேதி சட்டமன்றம் கூட உள்ள நிலையில் எதிர் கட்சியாக மக்கள் பிரச்சினைகளை எவ்வாறு விவாதிக்க வேண்டும்?. எதிர்கட்சி துணைத்தலைவர் மனுவை இதுவரை சபாநாயகர் ஏற்கவில்லை என்பதால் கூட்டத்தொடரின் போது எவ்வாறு பிரச்சினையை எடுத்துச்செல்வது குறித்தும் எடப்பாடி பழனிசாமி ஆலோசிக்கிறார்.
அதிமுகவில் இருந்து விலகி ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்த சில மாவட்ட செயலாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஆனால் அந்த மாவட்டங்களுக்கு இதுவரை நிர்வாகிகள் நியமிக்காததால் அதற்கான அறிவிப்புகள் வரலாம் எனவும், ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அதிமுக தலைமை சார்பில் முக்கிய அறிவிப்புகள் வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இது போன்ற முக்கிய ஆலோசனைகளை மேற்கொள்ள தலைமை அலுவலகத்திற்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிப்பட்டது. ஏராளமான தொண்டர்கள் வருவார்கள் என்பதால் எவ்வித அசம்பாவிதமும் ஏற்பட கூடாது என்பதற்காக காவல்துறையினர் கூடுதல் பாதுகாப்பு அளித்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்களிடையே தனித்தனியாக ஆலோசனை நடத்தி வந்த நிலையில், முக்கிய நிர்வாகிகள் அனைவருடன் கூட்டாக ஆலோசனை மேற்கொள்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
கலை.ரா
உருமாறிய கொரோனா: தடுப்பு நடவடிக்களை தீவிரப்படுத்தும் அரசு!
அடர் பனியில் உறைந்த வட மாநிலங்கள்!