கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி அதிமுக தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் சட்ட விரோதமாக விற்கப்பட்ட கள்ளச் சாராயத்தை நூற்றுக்கும் மேற்பட்டோர் குடித்த நிலையில் தற்போது வரை கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்கள் என்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 70க்கும் மேற்பட்டோர் புதுச்சேரி, சேலம், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக இதுவரை கோவிந்தராஜ், ஜீவா மற்றும் தனசேகரன் ஆகிய 3 பேரை கைது செய்துள்ள போலீசார் அவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, அதன் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட ஏடிஎஸ்பி கோமதி தலைமையில் 5 குழுக்கள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பெரும் புயலை எழுப்பியுள்ள கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரத்தை எதிர்க்கட்சியான அதிமுக தீவிரமாக கையில் எடுக்க திட்டமிட்டுள்ளது.
அதன்படி இந்த சம்பவத்திற்கு இன்று காலை கண்டனம் தெரிவித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று தொடங்கும் சட்டசபைக்கு செல்லாமல் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் சொல்ல இன்று கள்ளக்குறிச்சி செல்கிறார்.
இதற்கிடையே கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணம் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி அதிமுக தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதனை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், மனு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
Share Market : எல்.ஐ.சி-யை முந்த முன்னணி கார் தயாரிப்பு நிறுவனம் மாஸ்டர் பிளான்!