அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று (மார்ச் 22) தொடங்கி நடைபெற்று வருகிறது.
வரும் மார்ச் 26ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆனால் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்படவுள்ளார்.
இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோர் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தேர்தல் நடத்தலாம். ஆனால் முடிவு அறிவிக்க தடை விதிக்கப்படுகிறது என்று தெரிவித்தது.
இந்தசூழலில் ஓ.பன்னீர் செல்வம் தனியே சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ஒருங்கிணைப்பாளர்கள், இணை ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதியானதா? இல்லையா? என நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் முடிவில் தான் தெரியவரும். எனவே அதற்கு முன் நடைபெறும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த மனுவை ஏற்ற நீதிமன்றம், மற்ற 3 பேர் தொடர்ந்த வழக்குகளுடன் சேர்த்து மார்ச் 22ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று தெரிவித்தது.
அதன்படி இந்த வழக்குகள் நீதிமன்றத்தில் இன்று (மார்ச் 22) நீதிபதி குமரேஷ் பாபு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர், குரு கிருஷ்ணகுமார் வாதத்தை முன்வைத்து வருகிறார்.
“ஒருங்கிணைப்பாளர் பதவி 2026ஆம் ஆண்டு வரை செல்லும். எந்த காரணமும் சொல்லாமல், விளக்கமும் கேட்காமல் எங்களை கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர். இது தன்னிச்சையானது, நியாயமற்றது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் உரிய விதிகளை பின்பற்றி நடத்தப்பட்டது. இந்த பதவிகளை உருவாக்கிய தீர்மானத்துக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.முடிவெடுக்கும் அதிகாரத்தை பொதுக்குழுவுக்கு வழங்கியதே ஒருங்கிணைப்பாளர். இணை ஒருங்கிணைப்பாளர் தான்.
இந்த இரண்டு பதவிகளும் காலாவதியாகிவிட்டதாக எந்த நீதிமன்றமும் தெரிவிக்கவில்லை. தகுதி நீக்கம் செய்துவிட்டு, காலாவதியானதாக சொல்வதை எப்படி ஏற்கமுடியும்,
கடந்த ஜூன் 23ஆம் தேதி நடந்த பொதுக்குழுவுக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் அழைப்பு விடுத்தனர். ஆனால், ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் வழக்கமான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை.
எடப்பாடி பழனிசாமியின் செயல்கள் அதிமுகவை உருவாக்கிய எம்.ஜி.ஆரின் நோக்கத்துக்கு எதிரானதாக உள்ளது. யாரும் போட்டியிடாத வகையில் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு நிபந்தனைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
பெரும்பான்மை இருப்பதால் எந்த முடிவையும் எடுக்கலாம் என்ற தொனியில் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார். அதேசமயம் ஓபிஎஸ் 1977 முதல் கட்சிகாக பணியாற்றி வருகிறார். அதிமுகவுக்கு நெருக்கடி ஏற்பட்ட காலத்தில் கட்சிக்காக முக்கிய பணிகளை ஆற்றியுள்ளார்” என ஓபிஎஸ் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
பிரியா
”தண்ணீரை காக்க வேண்டும்”: முதல்வர் ஸ்டாலின்
தங்கம் விலை அதிரடி வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!
