அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக வந்துள்ள நிலையில், மக்களிடம் நீதி கேட்போம் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
இன்று (பிப்ரவரி 24) பிற்பகல் ஓபிஎஸ் தரப்பினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், “ஒரு வழக்கில் கீழ் நீதிமன்றத்தில் எதிரான தீர்ப்பு வந்தால் உயர் நீதிமன்றத்துக்கு செல்வோம்.
அங்கும் எதிரான தீர்ப்பு வந்தால் உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு செல்வோம். அங்கும் சாதகமாக வரவில்லை என்றால் உச்ச நீதிமன்றம் செல்வோம்.
உச்ச நீதிமன்றத்திலும் என்ன நோக்கத்துக்காக சென்றோமோ அதைதவிர்த்து வேறு வகையான தீர்ப்பு வருகிறது என்று சொன்னால் என்ன முடிவெடுக்கப்படும் என்று கேட்கிறீர்கள்.
நாங்கள் மக்களை நாடி செல்வோம். மக்கள் மன்றத்தில் நீதி கேட்போம். எம்.ஜி.ஆரும், அம்மாவும் உயிரை கொடுத்து இந்த கழகத்தை காப்பாற்றினார்கள். அவர்கள் வகுத்து கொடுத்த சட்டவிதியை காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கிறோம்.
அம்மாதான் கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளர். இந்த இயக்கம் தொண்டர்களுக்கான இயக்கம். இன்று வரை அப்படிதான் இருந்தது.
ஆனால் தற்போது கூவத்தூரில் எப்படி நடந்ததோ அதுபோன்று கட்சியை கைப்பற்றியிருக்கிறார்கள்.
அதிமுக என்பது ஓபிஎஸ் தாத்தா மாடசாமி தேவராஜ் ஆரம்பித்த கட்சியோ, எடப்பாடி பழனிசாமி தாத்தா ஆரம்பித்த கட்சியோ இல்லை.
மக்களை தேடி செல்ல எங்களது படை தயாராகிவிட்டது. எந்த தீர்ப்பும் எங்களுக்கு பின்னடைவு இல்லை. தற்போதுதான் எழுச்சியாக இருக்கிறோம்.
திமுகவின் பி டீம் என்று எதாவது கிறுக்கன் சொன்னால் அதை பற்றி கேள்வி கேட்பதா?திமுகவுக்கு நாங்கள்தான் பி டீம் என்றால் வேலுமணி மீதான வழக்கு, தங்கமணி மீதான வழக்கு, கொடநாடு வழக்கு எல்லாம் என்ன ஆச்சு.
எடப்பாடி அணிதான் திமுகவின் ஏ – இசட் டீம். எங்களை நோக்கி ஒரு சின்ன தவறு கூட சொல்ல முடியாது. இதுவரை கட்சி உடையக்கூடாது என்று பொறுமை காத்திருந்தோம். அவர்கள் செய்தது ஆயிரம் இருக்கிறது. அதையெல்லாம் இனி அம்பலப்படுத்துவோம்.
பன்னீரை, தினகரனை, சசிகலாவை எந்த காரணத்தைக் கொண்டும் கட்சியில் சேர்க்கமாட்டோம் என்கிறார் எடப்பாடி. இது என்ன இவர் தாத்தா ஆரம்பித்த கட்சியா?. இவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. ஆணவத்தில் இருக்கிறார். ஆணவத்தை அடக்குகிற சக்தி, தொண்டர்களிடமும் மக்களிடமும் இருக்கிறது. அது நிருபணமாகப்போகிறது.
நான் அரசியல் வாழ்க்கையில் இருந்து விலகப்போகிறேன் என தப்பு தப்பா பேசுகிறார்கள். நாங்கள் நாகரிகத்தோடு பேசிக்கொண்டிருக்கிறோம். பல நூற்றாண்டுகள் ஆனாலும் கொள்கை கோட்பாடுகளுக்கு எதிராக செயல்படமாட்டோம்.
விரைவில் மாவட்ட வாரியாக சென்று மக்களை சந்தித்து நீதி நியாயத்தை கேட்போம். போகப் போக மற்ற தலைவர்களை சந்திப்பது தொடர்பாக தெரியவரும்” என்றார்
பிரியா
பொதுக் குழு செல்லும், ஆனால் தீர்மானங்கள்? உச்ச நீதிமன்றத் தீர்ப்பை விமர்சிக்கும் பன்னீர் தரப்பினர்!