வைஃபை ஆன் செய்ததும், உச்ச நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு வழக்கு பற்றிய செய்திகள் அணி வகுத்தன. அவற்றைப் பார்த்துவிட்டு தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது வாட்ஸ் அப்.
“ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் களம் உச்சகட்ட உஷ்ணத்தில் இருக்கக் கூடிய நிலையில் இன்று (பிப்ரவரி 23) உச்ச நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு வழக்கில் வெளியான தீர்ப்பு ஈரோட்டின் உஷ்ணத்தை இன்னும் அதிகப்படுத்தியிருக்கிறது.
தீர்ப்பு வெளியானதுமே தனக்கு நெருக்கமான ஈரோட்டில் தேர்தல் பணியாற்றும் முத்துசாமி உள்ளிட்ட சில அமைச்சர்களைத் தொடர்புகொண்ட திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின், ’இப்படி எடப்பாடிக்கு சாதகமாக தீர்ப்பு வரும்னு எதிர்பார்த்ததுதான். நம்ம டெல்லி சோர்சுல முன்பே இப்படித்தான் சொன்னாங்க. அதேநேரம் இந்த தீர்ப்பு வந்திருக்கிற நேரம் ரொம்ப முக்கியமானது.
ஏற்கனவே உச்ச நீதிமன்றம்தான் எடப்பாடிக்கு இரட்டை இலையை கொடுத்துச்சு. இப்ப இடைத் தேர்தலுக்கு மூணு நாள் முன்பு இந்த தீர்ப்பு வந்திருக்குது.
இதனால கடைசிநேரத்துல அதிமுக காரங்க அதிக உற்சாகத்தோட செயல்பட வாய்ப்பிருக்கு. அதனால நாம் இன்னும் கவனமா, சுறுசுறுப்பா இருக்கணும்’ என்று தேர்தல் பணிக்குழுவில் பொறுப்பு வகிக்கும் அமைச்சர்களிடம் தெரிவித்திருக்கிறார் ஸ்டாலின்.
ஏற்கனவே தேர்தல் பணிக்குழுவில் பொறுப்பு வகிக்கும் ஒவ்வொரு அமைச்சரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில் தாறுமாறாக பணத்தையும் பொருட்களையும் அள்ளி இறைத்து வருகிறார்கள். தினம் தினம் 500 ரூபாய், பிரியாணி என்ற வழக்கமான கவனிப்புகள் இடைத் தேர்தல் பணிகள் ஆரம்பித்ததில் இருந்து திமுக அமைச்சர்களால் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டன.
இந்நிலையில் நாளாக ஆக பரிசுப் பொருட்களும் சேர்ந்துகொண்டன. குடம், பட்டுச் சேலை, வேட்டி, குக்கர் என்று பரிசுப் பொருட்கள் அமைச்சர்களால் வழங்கப்பட்டன. இதில் விஷயம் என்னவென்றால்… ஒவ்வொரு அமைச்சரும் ஒவ்வொரு விதமான பரிசுகளை தங்களது லிமிட்டுக்கு உட்பட்ட பகுதிகளில் வழங்கி வருகிறார்கள்.

இந்த நிலையில்தான் அதிமுக தரப்பில் தங்களுக்கு ஆதரவு வாக்காளர்கள், நடுத்தரமான வாக்காளர்கள் என கணக்கெடுத்து 1.15 லட்சம் வாக்காளர்களுக்கு பிப்ரவரி 21ஆம் தேதி இரவு ஓட்டுக்கு இரண்டாயிரம் என வழங்கிவிட்டனர், இதை அறிந்த திமுகவினர் மறுநாள் பிப்ரவரி 22ஆம் தேதி காலை 5 மணி முதல் ஓட்டுக்கு மூவாயிரம் என வழங்கினார்கள்.
திமுகவை பீட் பண்ணும் வகையில் நேற்று அதாவது பிப்ரவரி 22 ஆம் தேதி இரவு அதிமுக சார்பில் தொகுதி முழுதும் வீட்டுக்கு ஒரு வெள்ளி காமாட்சி விளக்கைக் கொடுத்திருக்கிறார்கள். பொதுவாக பெண்களுக்கு சென்டிமென்ட் அதிகம் உண்டு. அந்த வகையில் பெண்களுக்கு அதிமுக சார்பாக கொடுக்கப்பட்ட இந்த வெள்ளி காமாட்சி விளக்குப் பரிசு பெண்கள் கவனத்தை ஈர்த்தது.
அதிமுகவின் இந்த திடீர் பரிசுப் பட்டுவாடா திமுகவை டென்ஷனாக்கியது. இந்த விஷயத்தை உணர்ந்த திமுக அமைச்சர்கள் ஈரோடு மாவட்ட செயலாளரும் தேர்தல் பொறுப்பாளருமான முத்துசாமியைத் தொடர்புகொண்டு, ‘அதிமுக வேகமாக போயிட்டிருக்காங்க. நாம ஓட்டுக்கு ஐந்தாயிரம் கொடுத்திருக்கலாம். எதிர்க்கட்சி ரெண்டாயிரம் கொடுக்கும்போது ஆளுங்கட்சி மூவாயிரம்தானானு மக்கள் கேட்குறாங்க. மேலும் அவர்கள் வெள்ளி விளக்கு கொடுத்தது பெண்கள் மத்தியில பெரிசா பேசப்படுது. நாம உடனடியா ஏதாவது பண்ணனும்’ என்று கூறியுள்ளனர்.
இது தொடர்பாக அமைச்சர்கள் இன்று ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கும்போதுதான்… உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடிக்கே அதிமுக என்ற தீர்ப்பு வந்தது. இந்த தீர்ப்பு வந்தவுடன் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகவினர் வெடிவெடித்து கொண்டாடி இனிப்பு வழங்கியிருக்கிறார்கள். இடைத் தேர்தல் பணியின் தொடக்க காலத்தில் தொய்வு ஏற்பட்டிருந்த அதிமுகவுக்குள் இந்த தீர்ப்பு கடைசி நேரத்தில் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
எடப்பாடிக்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கும் நிலையில் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு கடைசி நேர உற்சாகம் காரணமாக 2 முதல் 3% வரை கூடுதல் வாக்குகள் கிடைக்கலாம் என்ற தகவல் உளவுத்துறை மூலம் முதலமைச்சருக்கு பாஸ் பண்ணப்பட்டது.
இந்த பின்னணியில்தான் அமைச்சர் முத்துசாமி உள்ளிட்ட தேர்தல் பொறுப்பாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,’கடைசி நாட்களில் நாம் மேலும் கவனமாகவும் தீவிரமாகவும் செயல்பட வேண்டும்’ என்று கூறியிருக்கிறார். இந்நிலையில் பிப்ரவரி 25 ஆம் தேதி ஸ்டாலின் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிரச்சாரத்துக்கு செல்கிறார்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
பாமக வேளாண் நிழல் பட்ஜெட்: சிறப்பம்சங்கள் என்ன?
ராமராஜனின் ”சாமானியன்” திரைப்பட வழக்கு: நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி தீர்ப்பு!