எப்போது பொதுச் செயலாளர் ஆவீர்கள்?: எடப்பாடி பதில்!

அரசியல்

அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என்று கூறி ஓபிஎஸ் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது. 

உச்ச நீதிமன்ற தீர்ப்பை  தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி  மதுரையில் இன்று (பிப்ரவரி 23) செய்தியாளர்களைச் சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், “பொதுக்குழு செல்லும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும்  என்று தீர்ப்பு வந்துள்ளது. நீதி, உண்மை எப்போதும்  வெல்லும்” என்றார். 

தொடர்ந்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

ஓபிஎஸுக்கு நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் ?

“நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்துவிட்டது. அவருக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை” 

எப்போது பொதுச் செயலாளர் ஆவீர்கள்?

கழக மூத்த நிர்வாகிகளுடன் தொடர்ந்து   பேசி முடிவெடுக்கப்படும். 

அதிமுக சட்ட விதிகளை காப்பாற்ற ஓபிஎஸ் இரண்டாவது தர்மயுத்தம் நடத்துவேன் என்று சொல்கிறாரே? 

அவரைத்தான் கேட்க வேண்டும். 

இரட்டை இலை வெற்றிச் சின்னமாக இல்லை என டிடிவி தினகரன் கூறுகிறாரே?

அவர் தனிக்கட்சி துவங்கிவிட்டார். எங்கள் கட்சியை பற்றி அவர் பேச வேண்டிய அவசியமும் இல்லை. தேவையும் இல்லை. தினகரனின் செல்வாக்கு கடந்த சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தலில் தெரிந்துவிட்டது. 

ஓபிஎஸுடன் இருப்பவர்கள்  மீண்டும் அதிமுகவுக்கு வந்தால் என்ன செய்வீர்கள்?

ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டுவிட்டது.  ஒருசிலரை தவிர மற்றவர்கள் எல்லாம் அதிமுகவுக்கு  வரலாம். 

அந்த ஒரு சிலர் இறங்கி வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா?

இல்லை என்று ஆன பிறகு, இனி எதுவும் செய்யமுடியாது. 

ஜெயலலிதா ஆளுமையை உங்களிடம்  எதிர்பார்க்க முடியுமா?

4 ஆண்டுகள் 2 மாதம் ஆட்சி கொடுத்திருக்கிறோம். இந்த கட்சி இருக்குமா, இருக்காதா என விவாதம் நடத்தினார்கள். இன்று ஒன்றாகிவிட்டது. எதிர்காலத்தில்  அதிமுகதான் ஆட்சியமைக்கும். கவலையே பட வேண்டாம். 

எடப்பாடி அதிமுகவின் பொதுச் செயலாளரா? தலைவரா? 

ஒன்றரை கோடி அதிமுகவினரும் பொதுச் செயலாளர் தான். 

இந்த தீர்ப்பு எந்தளவுக்கு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு கைக்கொடுக்கும்?

நிச்சயம் வெற்றி என்றளவுக்கு கைகொடுக்கும். 

2024 நாடாளுமன்ற கூட்டணி  எப்போது?

இன்னும் நாட்கள் இருக்கின்றன. அப்போது பேசிக்கொள்ளலாம். இப்போதைக்கு ஈரோடு கிழக்கில் தென்னரசு வெற்றி பெற வேண்டும்.   திமுக கூட்டணிக்கு பயம் வந்துவிட்டது. அதனால் தான் வாக்காளர்களை அடைத்து வைக்கிறார்கள். 

ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளிலிருந்து நீக்கப்படுவாரா?

ஏற்கனவே முடிவு செய்து அவரை நீக்கிவிட்டோம்.  

ஓபிஎஸ்  பின்னால் இருக்கக்கூடிய  எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் நிலை என்ன? சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமா?

அவரைத்தான் கேட்க வேண்டும். அந்த எம்.எல்.ஏ.க்களிடம் தான் கேட்க வேண்டும். 

அதிமுக வலுவாக இருக்கிறதா?

வலுவாகத்தான் இருக்கிறது. நீங்கள் தான் வலுவில்லை என பேசிக்கொண்டிருக்கிறீர்கள்.  வலுவாக இருந்ததால் தான் 66 எம்.எல்.ஏ.க்களை பெற்றிருக்கிறோம்.  ஒரு லட்சத்து 98 ஆயிரம் வாக்குகள் பெற்றிருந்தால் ஆளும் கட்சியாக இருந்திருப்போம்.  குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் நிறைய சட்டமன்ற தொகுதிகளை இழந்துவிட்டோம். 

டிடிவி தினகரன் வாக்கை பிரித்ததால் தான்  அதிமுகவுக்கு இந்தளவுக்கு இழப்பு ஏற்பட்டது  என்று சொல்கிறார்களே?

டிடிவி தினகரன்  கட்சியில் இருந்து பாதி பேர் இங்கு வந்துவிட்டார்கள். ஓபிஎஸ் குழுவில் இருந்து ஒருவர் நேற்று வந்துவிட்டார். தற்போது தீர்ப்பு வந்துள்ள நிலையில் அனைவரும் எங்களுடன் வந்துவிடுவார்கள்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.

பிரியா

ஜெயலலிதாவின் பிறந்தநாள் பரிசாக வந்த உச்சநீதிமன்ற தீர்ப்பு: எஸ்.பி. வேலுமணி

தீர்ப்பை நினைத்து இரவெல்லாம் தூக்கமே இல்லை: உருகிய எடப்பாடி

+1
0
+1
4
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *