அதிமுக வழக்கு: பழனிசாமிக்கு பன்னீர்செல்வம் பதில்!

அரசியல்

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த கூடுதல் மனுவுக்கு ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்து மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.

கடந்த ஜுலை மாதம் எடப்பாடி பழனிசாமி தரப்பால் நடத்தப்பட்ட பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்கக்கோரி, ஓ.பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி பொதுக்குழு செல்லாது என்றும், இரண்டு நீதிபதிகள் அமர்வினர் பொதுக்குழு செல்லும் என்றும் மாறி மாறி தீர்ப்பளித்தனர்.

இதையடுத்து ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

கடந்த 6 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது எடப்பாடி பழனிசாமி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுந்தரம், அதிமுக பொதுக்குழு விவகாரம் நிலுவையில் இருப்பதால் கட்சி நடவடிக்கைகள் ஸ்தம்பித்து உள்ளன.

இந்த வழக்கில் ஒரு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என்று கேட்டிருந்தார். அப்போது நீதிபதிகள், தேர்தல் ஆணையத்துக்கு இதுதொடர்பாக எதாவது தகவல் தெரிவிக்கப்பட்டதா என்று கேள்வி எழுப்பி, இதுதொடர்பாக ஒரு கூடுதல் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

கூடுதல் மனு தாக்கல் செய்யப்படும் பட்சத்தில் பதில் மனுத்தாக்கல் செய்யவும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு உத்தரவிட்டிருந்தனர்.

இந்தநிலையில்தான் எடப்பாடி பழனிசாமி சார்பில் உச்சநீதிமன்றத்தில் நேற்று(டிசம்பர் 9) கூடுதல் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ” உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை காரணம் காட்டி யாரையும் செயல்படாமல் ஓ. பன்னீர்செல்வம் தடுத்து வருகிறார்.

தேர்தல் ஆணையத்தை எதிர்மனுதாரராக சேர்க்காமலேயே, அதன் செயல்பாடுகளுக்கு ஓபிஎஸ் முட்டுக்கட்டை விதித்து வருகிறார்.

சின்னம், உள்ளிட்டவற்றுக்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்தை அணுகவும், கட்சிப் பணிகளுக்கு இடையூறு விளைவிக்காத வகையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு தடை விதிக்கவேண்டும்” என்று எடப்பாடி பழனிசாமி கூடுதல் மனுவில் கோரிக்கைகள் வைத்திருந்தார்.

இந்தநிலையில் இன்று(டிசம்பர் 10) ஓ.பன்னீர்செல்வம் பதில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.

அ.தி.மு.க வின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பற்றிய முடிவே இன்னும் வரவில்லை. இந்தநிலையில், எவ்வாறு தேர்தல் ஆணையத்தை இந்த வழக்கில் சேர்க்க முடியும் என்று ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார். வழக்கு 12 ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

கலை.ரா

மாண்டஸ் பாதிப்பு: முதலமைச்சர் நேரில் ஆய்வு!

அதிமுகவோடு கூட்டணி இல்லை- திமுகவோடு சமரசம் இல்லை: அண்ணாமலையின் புது ரூட்!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0