அக்டோபர் 17ம் தேதி கூட இருக்கும் சட்டமன்றத்தை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி புறக்கணிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
தமிழக சட்டமன்றம் வரும் அக்டோபர் 17ம் தேதி கூட இருக்கிறது. இதில், துணை பட்ஜெட் தவிர, ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கை,
தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை உள்ளிட்டவை தாக்கல் செய்யப்பட இருக்கின்றன.
மேலும், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்களும் இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்ற திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் சட்டப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

செப்டம்பர் 2ம் தேதி உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அளித்த தீர்ப்பின்படி அதிமுக பொருளாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது செல்லும் என்கிற நிலை நீடிக்கிறது.
அவர், வகித்து வந்த எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியில் இருந்து அவரை நீக்கியது தொடர்பாகவும் அவருக்குப் பதிலாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி தரப்பு சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் எழுதியிருந்தது.
அதுபோல், ஓ.பன்னீர்செல்வமும் சபாநாயகருக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்தச் சூழலில் சட்டமன்றம் கூடினால் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு எங்கு இருக்கை ஒதுக்கப்படும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
இதுகுறித்து நேற்று (அக்டோபர் 7) செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த சபாநாயகர் அப்பாவு,
”ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி அணியினருக்கான இருக்கைகள் தொடர்பாக சட்டப்பேரவை கூடும்போது தெரியவரும்.
அவர்கள் இருவருமே முதலமைச்சர்களாக இருந்தவர்கள். நிச்சயம் கண்ணியமாக நடந்துகொள்வார்கள்.
அதேபோல் இருக்கைகள் ஒதுக்குவது தொடர்பாக சட்டமன்ற மரபுபடியே நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார். ஓ.பன்னீர்செல்வம் இருக்கை தொடர்பாக,
எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் சில நாட்களாகவே ஆலோசனை நடத்தி வருகிறார். அப்போது எடப்பாடி, “ஓ.பன்னீர்செல்வத்தை எனக்கு அருகிலேயே உட்காரவைக்க திமுக நினைக்கிறது.
இதனால், நமக்கும் அவருக்கும் மேலும் மோதல்தான் வரும். இதைத்தான் திமுக எதிர்பார்க்கிறது” என்று எடுத்துரைத்துள்ளார்.
அதற்கு அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம், “சட்டசபைக்குள் நாம் செல்வோம். எதுவந்தாலும் பார்த்துக்கொள்ளலாம்” என்று ஆலோசனை வழங்கியிருக்கிறார்.
ஆனால் எடப்பாடி பழனிசாமியோ, “திமுக செய்யும் இந்த சதிவலையில் நாம் ஏன் சிக்கிக் கொள்ள வேண்டும்?
பன்னீர்செல்வம் தரப்பை எங்கு உட்கார வைக்கிறார்கள் என்று முதலில் பார்ப்போம். அப்படி நமக்கருகில் உட்கார வைத்தால் சட்டமன்றத்தைப் புறக்கணிப்போம்” என தற்போதைக்குச் சொல்லியிருக்கிறாராம்.
ஜெ.பிரகாஷ்