சிட்டுக்குருவிக்கு பட்டம் கட்டினால் அது திமிரு பிடிச்சி ஆடும் என்று அண்ணாமலை குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
சென்னையில் இன்று (செப்டம்பர் 18) செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை. தேர்தல் வரும்போது தான் கூட்டணி குறித்து முடிவெடுக்க முடியும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “சிட்டுக்குருவிக்கு பட்டம் கட்டினால் அது திமிரு பிடிச்சி ஆடும். வீட்டில் உள்ள பண்டம் பாத்திரங்களை டொக்கு டொக்கு என்று கொத்தும். அதுபோல அண்ணாமலைக்கு தகுதிக்கு மீறிய பதவி கொடுக்கப்பட்டுள்ளது. அதிமுக சிங்க கூட்டம். சிறுநரி அண்ணாமலை சிங்க கூட்டத்தை பார்த்து ஊளையிடுகிறது.
தனக்கு தானே சொந்த புகழ் பாடுவது தான் அண்ணாமலையின் வேலை. அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அண்ணாமலைக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றினாலும் பெரியார், அண்ணா, எடப்பாடி பழனிசாமி குறித்து விமர்சனம் செய்து வருகிறார்.
பாஜகவில் இல.கணேசன், தமிழிசை இருந்தபோது இதுபோன்ற பிரச்சனைகள் எழுந்ததில்லை. பாஜக மாநில பொறுப்புக்கு அண்ணாமலை தகுதியற்றவர். அவரது விமர்சனத்திற்கு அதிமுகவினர் பதிலடி கொடுப்பார்கள்.
பாஜக மேலிடம் சொல்லி அண்ணாமலை பேசுவது போன்று தான் உள்ளது. பாஜகவால் அதிமுகவுக்கு இழப்பு இல்லை. பாஜக வேஸ்ட் லக்கேஜ். நோட்டாவை பாஜக ஜெயிக்குமா என்று பாருங்கள். அண்ணாமலை பேச்சை அவர்களது கட்சிக்காரர்களே ரசிக்கவில்லை.
மூத்த தலைவர்கள் அனைவரையும் ஒரம்கட்டிவிட்டு தன்னை முன்னிலைப்படுத்த முயற்சிக்கிறார். அதிமுக ஃபைல்ஸ் என்ற பூச்சாண்டிக்கு பயப்படுகிறவர்கள் நாங்கள் கிடையாது. எத்தனையோ கோப்புகளை நாங்கள் பார்த்துவிட்டோம். அண்ணாமலை தனியாக நின்று தொகுதியில் வெற்றி பெற முடியுமா? நோட்டாவிற்கு கீழ் தான் வாக்கு வாங்குவார். அண்ணாமலை விமர்சனத்தை அதிமுக கட்சி தொண்டர்கள் ஏற்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
அப்போ ’லவ் டுடே’… இப்போ ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’
காவல் நிலையத்தில் மனைவியுடன் ஆஜரான சீமான்