கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் அன்பரசன் போட்டியிடுவார் என்று எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப்ரல் 19) அறிவித்துள்ளார்.
கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் மே 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 13ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
224 தொகுதிகளைக் கொண்ட சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட அதிமுக கோரியது. ஆனால் அக்கட்சிக்கு ஒதுக்காமல் அனைத்து இடங்களிலும் பாஜக போட்டியிடப்போவதாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அதிமுக-வுக்கு செல்வாக்குள்ள கோலார் தங்கவயல் மற்றும் காந்திநகர் ஆகிய தமிழர்கள் அதிகம் வாழும் 10 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட அதிமுக திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.
வேட்புமனு தாக்கல் செய்ய நாளை (ஏப்ரல் 20) தான் கடைசி நாள் என்ற நிலையில் கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக போட்டியிடுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, மே 10ம் தேதி நடைபெற உள்ள கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் புலிகேசி நகர் (159) சட்டமன்றத் தொகுதியில், அதிமுக அதிகாரப்பூர்வ வேட்பாளராக அன்பரசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அன்பரசன் கர்நாடக மாநிலக் கழக அவைத் தலைவராக உள்ளார்.
தமிழ்நாட்டில் பாஜகவுடன், அதிமுக கூட்டணி வைத்துள்ள நிலையில், கர்நாடக தேர்தலில் ஏற்கெனவே பாஜக வேட்பாளர் அறிவிக்கப்பட்ட புலிகேசி தொகுதியில் தற்போது அதிமுக சார்பில் வேட்பாளர் அறிவித்திருப்பது இரு கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா