வைஃபை ஆன் செய்ததும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பற்றி அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் கடும் கோபத்தோடு பேசிய வீடியோக்கள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்துவிட்டு வாட்ஸ்அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளரும் முன்னாள் தமிழக முதல்வருமான மறைந்த ஜெயலலிதா குறித்து ஆங்கில நாளிதழில் பேட்டி ஒன்றில் அண்ணாமலை தெரிவித்த கருத்து அதிமுகவின் அனைத்து முகாம்களிலும் கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது.
அதிகாரப்பூர்வ அதிமுகவான எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று தன்னை சொல்லிவரும் ஓ பன்னீர்செல்வம், அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்டு தனிக்கட்சி கண்ட டிடிவி தினகரன், இவர்கள் எல்லாரையும் இணைப்பேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும் சசிகலா என அத்தனை பேரும் அண்ணாமலையின் ஜெயலலிதா பற்றிய கருத்துக்காக கண்டனங்களை வெளியிட்டு இருக்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில்தான் ஏற்கனவே திட்டமிட்டபடி ஜூன் 13ஆம் தேதி அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தலைமைக் கழகத்தில் கூடியது. உறுப்பினர் சேர்க்கையை இரண்டு கோடியாக உயர்த்துதல், பூத் கமிட்டிகள் அமைத்தல், ஆகஸ்ட் மாதம் மதுரை மாநாடு ஏற்பாடுகள் பற்றி ஆலோசிக்கத் தான் இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் அண்ணாமலை தெரிவித்த கருத்துக்கு அதிமுக தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்ட கொந்தளிப்பின் காரணமாக, அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின் ஒரே அஜென்டவாக மாறிப்போனார் அண்ணாமலை
கூட்டம் தொடங்குவதற்கு முன்பே எடப்பாடி பழனிசாமியை சந்தித்த அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளும் மாவட்ட செயலாளர்களும்… ‘நமது கட்சியின் அடிப்படையான ஜெயலலிதாவையே இழிவுபடுத்தி விட்டு அண்ணாமலையை இனியும் நாம் கூட்டணிக்காக சகித்துக் கொண்டிருக்க முடியாது’ என்று தெரிவித்திருந்தனர்.
பெரும்பாலான நிர்வாகிகள் உணர்வுகளை அறிந்த எடப்பாடி பழனிசாமி மாவட்ட செயலாளர் கூட்டத்தில் வேறு சப்ஜெக்ட் பற்றி எதுவும் அதிகமாக விவாதிக்காமல்… இந்த விவகாரத்தையே கையில் எடுத்தார்.
‘ஏற்கனவே கடந்த 2019 மக்களவைத் தேர்தல் 2021 சட்டமன்றத் தேர்தல் ஆகிய முக்கியமான தேர்தல்களில் பாஜகவை நாம் தூக்கிச் சுமந்ததால் தான் தோல்விக்கு ஆளானோம். பத்து வருடம் ஆளுங்கட்சியாக இருந்த பிறகும் 2021 சட்டமன்ற பொது தேர்தலில் அதிமுகவுக்கு 66 இடங்கள் கிடைத்தன. பாஜக மட்டும் கூட்டணியில் இல்லை என்றால் நாம் மேலும் அதிக இடங்களை பெற்று இருக்கலாம்.
மேலும் பாஜகவோடு இருக்கும் ஒரே காரணத்தை சொல்லியே அதிமுகவை திமுக விமர்சனம் செய்து வருகிறது. இனி என்ன நடந்தாலும் நடக்கட்டும்… ஜெயலலிதாவை பற்றி அண்ணாமலை விமர்சனம் செய்த பிறகும்… இனி பாஜகவோடு கூட்டணி வைத்தால் நாம் என்ன சொல்லி தொண்டர்களிடம் ஒட்டு கேட்க முடியும்? ‘ என்று பல மாவட்ட செயலாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் தான்… மாவட்ட செயலாளர் கூட்டத்தில் அண்ணாமலைக்கு எதிரான கண்டனத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
மேலும், ‘ஜெயலலிதா பற்றிய கருத்துக்காக அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அக்கட்சியின் தேசிய தலைமையிடம் வலியுறுத்துவோம். ஒருவேளை அண்ணாமலை மன்னிப்பு கேட்கவில்லை என்றால் கூட்டணியையே நாம் மறுபரிசீலனை செய்வோம். அதுவரை அண்ணாமலை அட்டாக்கை மட்டும் தொடருங்கள். வேறு யாரையும் நாம் தாக்க வேண்டாம்’ என்று சொல்லியிருக்கிறார் எடப்பாடி.
அதிமுகவின் மற்ற நிர்வாகிகள் எல்லாம் அண்ணாமலையை விமர்சிக்கிறார்கள்… இன்னும் எடப்பாடி மௌனமாக இருக்கிறார் என்ற கேள்வி ஜூன் 12ஆம் தேதியே ஊடகங்களில் எழுந்தது. இதற்கு பதில் தரும் வகையில் அண்ணாமலைக்கு எதிரான கண்டன தீர்மானத்தை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முடிந்த பிறகு எடப்பாடி பழனிச்சாமியே செய்தியாளர்களிடம் வாசித்தார்.
அதிமுகவின் இந்த கண்டன தீர்மானத்திற்கு பாஜக தரப்பில் உடனடியாக பதிலடி தரப்பட்டது. ஜூன் 13ஆம் தேதி மாலை இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட அண்ணாமலை… ‘ கூட்டணி கட்சி விரும்புவதை எல்லாம் நாங்களும் கூற வேண்டும் என்று எதிர்பார்ப்பது பொருத்தமற்றது. ஊழலின் தலைநகரம் தமிழகம் என்ற போக்கினை மாற்றி ஊழலற்ற நல்லாட்சி வழங்கிட வேண்டும் என்பதை எனது ஒற்றை ஆசை லட்சியம். கூட்டணி கட்சியையும் கூட்டணி தலைவர்களையும் நடத்தும் விதம் குறித்து எனக்கு யாரும் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை’ என்று தான் ஜெயலலிதா பற்றி வெளியிட்ட கருத்தை நியாயப்படுத்திய விளக்கம் அளித்து இருந்தார் அண்ணாமலை.
இது தொடர்பாக பாஜக நிர்வாகிகளிடம் பேசிய போது, ‘அண்ணாமலைக்கும் பாஜகவின் தேசிய தலைமைக்கும் ஏதோ இடைவெளி ஏற்பட்டிருப்பதாக அதிமுகவினர் பொது மேடைகளில் கூறி வருகிறார்கள். ஆனால் அமித்ஷா உள்ளிட்டவர்களின் கண்ணசைவின்படி தான் அண்ணாமலை இப்போது வரை செயல்பட்டு வருகிறார். அமித்ஷாவின் அஜெண்டா என்ன என்பது போக போக தான் தெரியும்’என்கிறார்கள்.
ஒருவேளை மீண்டும் அதிமுக பாஜக கூட்டணி தொடர்வதாக அக்கட்சியின் தலைமைகள் அறிவித்தாலும் கீழே தொண்டர்கள் அளவில் இந்த கூட்டணி சற்றும் ஓட்டாது என்பது கள நிலவரம்” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.