அதிமுக 51-வது துவக்கவிழா: எடப்பாடி – பன்னீர் தனித்தனியே கொண்டாட்டம்!

Published On:

| By Kalai

உட்கட்சி பிரச்சினையால் அதிமுக 51ஆம் ஆண்டு தொடக்க விழாவை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் தனித்தனியாக பிரிந்து கொண்டாடினர்.

அதிமுக தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டது. அக்கட்சியின் 51 வது ஆண்டு விழா இன்று(அக்டோபர் 17) கொண்டாடப்படுகிறது.

அதிமுகவில் அதிகாரப் போட்டி காரணமாக கட்சி உடைந்து இருப்பதால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா மூவரும் துவக்க விழாவை தனித்தனியாகக் கொண்டாடுகின்றனர்.

51 ஆவது துவக்க விழாவை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகம் வண்ண விளக்குகளால் பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. காலையிலேயே ஏராளமான தொண்டர்கள் குவிந்து இருந்தனர்.

ADMK 51st Inaugural Ceremony unique celebration

காலை 9 மணிக்கே அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதேபோன்று சென்னை தி.நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக வின் கொடியை ஏற்றி எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அண்ணா, ஜானகி,ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கும் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து அவர் சமாதானப் புறாவை பறக்கவிட்டார். கட்சி பிளவுப்பட்டு கிடக்கும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தூதுவிடுவது போன்றே இது இருந்தது.

இதேபோன்று சசிகலா ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர் இல்லத்தில் அதிமுக துவக்கவிழாவை கொண்டாட இருக்கிறார்.

உட்கட்சி பிரச்சனை காரணமாக இந்த வருடம் அதிமுக ஆண்டு மலர் வெளியிடப்படவில்லை.

கலை.ரா

ஆ.ராசா மீது வழக்கு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி!

எடப்பாடி புறக்கணிப்பு: சபாநாயகர் விளக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share