விசிகவில் புதிய மா.செக்கள்… -பழையவர்கள் மீது கை வைக்காத திருமா- என்ன பின்னணி!

அரசியல்

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற நிர்வாக மாற்றம் கடந்த ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டது. இதன்படி தொடர்ந்து நிர்வாக மறு சீரமைப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன். இதன் அப்டேட்டுகள் பற்றி அவ்வப்போது வீடியோ மூலமாக வெளியிட்டு வருகிறார்.

இந்த வகையில் ஏற்கனவே பதவியில் இருக்கிற 144 மாவட்டச் செயலாளர்களும் அப்படியே தொடர்வார்கள் என்ற முக்கிய அறிவிப்பை நேற்று (நவம்பர் 11) இரவு வெளியிட்டிருக்கிறார் திருமாவளவன்.

மின்னம்பலத்தில் விசிகவின் மறு சீரமைப்பு பற்றி கடந்த நவம்பர் 6 ஆம் தேதி, விசிகவில் புதிய மாசெ.க்கள் நியமனம்… ஆதவ் ரோல் என்ன? கட்சிக்குள் சலசலப்பு! என்ற தலைப்பில் விரிவான ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

அந்த கட்டுரையில், “ஆதவ் அர்ஜுனாவிடம் கட்சியின்  கட்டமைப்பு பற்றிய டேட்டாக்கள் கொடுக்கப்பட்டன. அவர் தனது டேட்டா அனலைஸ் ரிப்போர்ட்டை திருமாவிடம் சமர்ப்பித்து பல்வேறு பவர் பாயின்ட் விளக்கங்களை அவருக்கு அளித்தார்.

அதிகாரத்தில் பங்கு என்று நாம் கட்சிக்கு வெளியே கோரிக்கை வைக்கும் நிலையில், கட்சிக்குள்ளேயே அதிகாரம் கிடைக்காமல் இருக்கும் பலருக்கும் நிர்வாக அதிகாரத்தை நிரவ வேண்டும். இதற்கு தேர்தல் ஆணைய அலகு ரீதியாக கட்சி நிர்வாக அலகையும் மாற்ற வேண்டும் என்பது ஆதவ் அர்ஜுனாவின் ப்ரசன்டேஷன்.இதை ஏற்றுக் கொண்ட திருமா உயர் நிலை குழுவில் இதுகுறித்து விவாதித்தபோது  மூத்த நிர்வாகிகள்  இதில் ஏற்படும் நடைமுறை சங்கடங்களை விளக்கினார்கள்.

விசிகவில் கடந்த வருடம்தான்  மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கை 144 ஆக உயர்த்தப்பட்டது.   இப்போதைய விரிவாக்கல் நடவடிக்கை மூலம் ஏற்கனவே இருக்கும் 144 பேர்களின் பதவிகளுக்கு ஆபத்து என்ற பதற்றத்தில் இருக்கிறார்கள்.  ஒரு வருடத்துக்குள் மாசெ பதவியில் இருந்து அகற்றப்படும் பட்சத்தில் அவர்கள் வேறு கட்சிகளுக்கு செல்லும் நடைமுறை கடினங்களை  நாம் எதிர்கொள்ள நேரிடும் என்றும் திருமாவிடம் கூறியிருக்கிறார்கள். இதையடுத்து ஏற்கனவே இருக்கும் 144 மாவட்டச் செயலாளர்களில் புகார்களுக்கு உள்ளானவர்கள் மட்டும் மாற்றப்படுவார்கள் என்று திருமா உறுதியளித்துள்ளார்” என்று அந்த கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம்.

இந்த நிலையில்தான் புதிய மாசெ.க்கள் நியமனம் குறித்து நவம்பர் 11 ஆம் தேதி இரவு திருமாவளவன் வெளியிட்ட வீடியோவில் சில புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

“ஏற்கனவே 144 மாவட்டச் செயலாளர்கள் யாரையும் மாற்ற வேண்டியதில்லை என முடிவெடுத்திருக்கிறோம். இவர்கள் கடந்த ஆண்டுதான் நியமிக்கப்பட்டார்கள். ஒன்றரை ஆண்டுகள்தான் ஆகிறது. இவர்களில் சிலரை எந்த காரணத்தை முன்னிட்டும் விடுவிப்பது ஏற்புடையதல்ல என்று ஜனநாயக பூர்வமாக உயர் நிலை கூட்டம் முடிவு செய்துள்ளது.
இவர்களில் 9 மாவட்டச் செயலாளர்களுக்கு சொந்தத் தொகுதி என்ற அடிப்படையில் முரண்கள் எழுகின்றன.  அவர்களது சொந்தத் தொகுதி அல்லாத தொகுதி மாவட்டத்துக்கு செயலாளராக நியமிக்க வேண்டிய சூழல் உள்ளது.  இந்த ஒன்பது தொகுதிகளுக்கு   பேசி முடிவெடுக்கப்படும். மற்ற 135 பேருக்கும் அவரவர் சொந்தத் தொகுதி மாவட்டச் செயலாளர்களாக செயல்படுவார்கள்.

15 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று அறிவித்திருந்தோம். அந்த ஒருங்கிணைப்புக் குழு யார் என்று நவம்பர் 12 ஆம் தேதி அறிவிக்கப்படும். விண்ணப்பத்தை அவர்கள் எடுத்து வருவார்கள். நீங்கள் பூர்த்தி செய்து தரலாம். ஆன் லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 20 ஆம் தேதி என நீட்டிப்பு செய்துள்ளோம்.

எனவே 144 பேருக்கான தொகுதிகள் போக, எஞ்சிய தொகுதிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தோடு தமிழ் மண் சந்தா 2 ஆயிரம் ரூபாய் தர வேண்டும். அதை பணமாக யாரும் குழுவினரிடம் தர வேண்டாம். டி.டி. க்யூ ஆர் கோடு மூலமாக செலுத்தலாம்” என்று திருமா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதனால் விசிகவின் புதிய மாசெக்களாக 90 பேர் நியமிக்கப்படுவார்கள்.

“நிர்வாகிகள் நியமனத்தில் தலைவர் இன்னும் எத்தனை,  ’வாய்தா வீடியோ’க்கள் போடப் போகிறாரோ?” என்று கேட்கிறார்கள் கட்சி நிர்வாகிகள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வேந்தன்

சர்ச்சைக்குரிய வாட்ஸ்அப் குரூப் : இரு ஐஏஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்!

சிறுவனை கொன்ற இந்தியர்… சவுதி சிறையில் 18 ஆண்டுகள்… தாயாரை சந்தித்த தருணம்!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *