நெருங்கும் தீர்ப்பு: பதறும் வேலுமணி

அரசியல்

டெண்டர் முறைகேடு மற்றும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்குகளின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

அதிமுக ஆட்சிக்காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் சுமார் 500 கோடி ரூபாய் வரை முறைகேடுகள் செய்ததாகவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது குற்றச்சாட்டு எழுந்தது.

அறப்போர் இயக்கம் மற்றும் திமுக சார்பில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை ஆராய்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.வேலுமணி மீது 2 வழக்குகள் பதிவு செய்தது.

இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்குகள் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அமர்வில் கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது,எஸ்.பி.வேலுமணி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வேலுமணிக்கு எதிரான புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை என்று வாதிட்டிருந்தார்.

ஒளிவுமறைவற்ற முறையில் டெண்டர் கோரப்பட்டதாகவும், டெண்டர் வழங்கியதில் எஸ்.பி.வேலுமணிக்கு எந்த பங்கும் இல்லை என்றும், டெண்டர் ஒதுக்கும் குழுவிலும் அவர் இடம்பெறவில்லை என்றும்  வாதிடப்பட்டது.

டெண்டர் ஒதுக்கீடு தொடர்பாக அப்போதைய எதிர்கட்சி மாநகராட்சி உறுப்பினர்கள் கூட எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்றும், எனவே  உள்நோக்கத்துடன் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் வேலுமணி தரப்பில் வாதிடப்பட்டிருந்தது.

இந்தநிலையில் இந்த வழக்குகள் இன்று(நவம்பர் 8) மீண்டும் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது புகார்தாரரான அறப்போர் இயக்கத்தின் சார்பில் வழக்கறிஞர் வி.சுரேஷ் வாதங்களை முன் வைத்தார்.

எஸ்.பி.வேலுமணி மீதான குற்றச்சாட்டுக்களை கூறி அளிக்கப்பட்ட புகாருக்கு ஆதாரமாக ஏராளமான ஆவணங்கள் அறப்போர் இயக்கம் சார்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தற்போதுள்ள தமிழக அரசு உள்நோக்கத்துடன் வழக்குபதிவு செய்துள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதம் தவறு என்றும் வழக்கறிஞர் வி.சுரேஷ் குற்றம்சாட்டினார். முந்தைய அதிமுக அரசும், லஞ்ச ஒழிப்புத் துறையும் தான் உள்நோக்கத்துடன் செயல்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 கோவையில் அமைச்சரின் உறவினர்களுக்கு சொந்தமான இரண்டு நிறுவனங்களுக்கு 47 டெண்டர்கள் வழங்கப்பட்டதாகவும், அதற்கு ஆதாரமாக ஒரே ஐ.பி. முகவரியில் இருந்து இந்த டெண்டர்கள் கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளதையும் வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.

எஸ்.பி.வேலுமணிக்கு வேண்டப்பட்டவர்கள் மட்டுமே கலந்துகொள்ளும் வகையில் மாநகராட்சி அதிகாரிகளால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு, அவர்களுக்கு மட்டும் டெண்டர் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

முறைகேடாக டெண்டர் ஒதுக்க துணையாக இருந்த அரசு அதிகாரிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டுமென்றும், அது கடந்த ஆட்சி காலத்தில் இருந்த அதிகாரிகள் மட்டுமல்லாமல், தற்போதைய மற்றும் எதிர்கால அரசுகளின் அதிகாரிகளுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டுமெனவும் அறப்போர் இயக்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகினார். சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ஒப்பந்ததாரர்கள் பங்கேற்க கூடாது என்பதற்காக நிறுவனங்களின் ஆண்டு வருமானத்தை 10 கோடி ரூபாயிலிருந்து 20 கோடி ரூபாயாக மாற்றி அமைத்தது விசாரணையில் தெரிய வந்ததாக கூறினார்.

எஸ்.பி.வேலுமணி தரப்பில், தனக்கெதிரான புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை என்று லஞ்ச ஒழிப்பு துறை எஸ்.பி. அறிக்கை அளித்து, அதற்கு ஊழல் கண்காணிப்பு ஆணையர் ஒப்புதல் அளித்து,  அரசுக்கு அனுப்பியதாகவும், அதை ஆராய்ந்த தமிழக அரசு 2020ஆம் ஆண்டு ஜனவரியில் தனக்கு எதிரான நடவடிக்கையை கைவிடுவது என முடிவு எடுத்ததாக வாதிடப்பட்டது.

ஆரம்பகட்ட விசாரணையை கருத்தில் கொள்ளாமல், சிஏஜி எனப்படும் மத்திய கணக்கு தணிக்கை குழு அறிக்கையை மட்டும் வைத்து தன் மீது  வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தை தவறாக வழி நடத்தியுள்ளதாகவும் வேலுமணி தரப்பில் வாதிடப்பட்டது.

எஸ்.பி வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு மற்றும் சொத்துக்குவிப்பு வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்துவிட்டன. இதையடுத்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கலை.ரா

பிரியாணி கேட்ட மனைவி: தீவைத்து கொன்ற கணவர்!

10% இடஒதுக்கீடு: கே.எஸ்.அழகிரி வரவேற்பு!

+1
0
+1
1
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *