மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம்: சட்டப்பேரவை ஒத்திவைப்பு!
சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல்நாளில் மறைந்த தலைவர்கள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று(அக்டோபர் 17) தலைமைச் செயலகத்தில் தொடங்கியது. ஓ.பன்னீர்செல்வம் எதிர்க்கட்சி துணைத் தலைவராக தொடர்வாரா, இல்லையா என்ற கேள்வி இருந்ததால் இந்தக் கூட்டத்தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்தநிலையில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரது இருக்கைகள் மாற்றப்படவில்லை. சட்டமன்ற மாண்புப்படி நடவடிக்கை எடுத்ததாக சபாநாயகர் தெரிவித்திருந்தார்.
காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் கூடியது. திமுக உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்ட நிலையில், அதிமுகவில் எடப்பாடி அணியினர் பேரவையை புறக்கணித்தனர். ஓ.பன்னீர்செல்வம் எதிர்க்கட்சித் துணைத்தலைவர் இருக்கையில் அமர்ந்திருந்தார்.
சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவையை தொடங்கி வைத்து இரங்கல் குறிப்புகளை வாசித்தார்.
முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா, இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், உத்திரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ், இந்திய விடுதலைப் போராளி அஞ்சலை பொன்னுசாமி அம்மாள், மலேசிய இந்திய காங்கிரசின் முன்னாள் தலைவர் எஸ்.சாமிவேலு, மார்க்சிஸ்ட் கட்சி மூத்த தலைவர் கொடியேரி பாலகிருஷ்ணன் உள்பட முக்கிய தலைவர்களுக்கும், மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
பிறகு சட்டமன்ற உறுப்பினர்கள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவை கூட்டத்தை ஒத்தி வைத்தார்.
கலை.ரா
சட்டப்பேரவை கூட்டம்: எடப்பாடி பழனிசாமி புறக்கணிப்பு!
இமாச்சல் தேர்தல்: 57 காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு!