India alliance Mamata decision background
வருகிற மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வண்ணம் மெல்ல மெல்ல உறுதியாகிக் கொண்டிருந்த, ‘இந்தியா’ கூட்டணி மேற்கு வங்காள முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியால் தற்போது பெரும் பின்னடைவை சந்தித்திருக்கிறது.
’நாங்கள் இந்தியா கூட்டணியில் இருக்கிறோம். ஆனால் மேற்கு வங்காளத்தில் தனியாகவே போட்டியிடுகிறோம்’ என்று நேற்று (ஜனவரி 24) அறிவித்து நாடு முழுவதும் அரசியல் அரங்கை அதிர வைத்திருக்கிறார் மம்தா பானர்ஜி.
அரசியலில் ஒவ்வொரு பெரும் முடிவுக்கும் பின்னால் சில தனி நபர்கள் முக்கிய கிரியா ஊக்கிகளாக இருப்பதுண்டு. அந்த வகையில் மம்தாவின் இந்த அதிரடி முடிவுக்குக் காரணம் அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரிதான் என்கிறார்கள் கொல்கத்தா அரசியல் வட்டாரங்களில்
மம்தாவுக்கும், ஆதிர் ரஞ்சன் சௌத்ரிக்கும் இடையிலான நீண்ட நாள் மோதலின் வெளிப்பாடுதான் இந்த அதிரடி முடிவு என்கிறார்கள் அவர்கள். மம்தாவுக்கும் மேற்கு வங்காள மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கும் இடையிலான உறவு பல ஆண்டுகளாக கசப்புடன் உள்ளது.
69 வயதான மம்தா பானர்ஜி, 1998 ஜனவரி 1 ஆம் தேதி காங்கிரஸில் இருந்து விலகினார். முன்னாள் மத்திய அமைச்சர் ஆதிர் ரஞ்சனுக்கு 67 வயதாகிறது. 1999 முதல் பெர்ஹாம்பூரில் இருந்து ஐந்து முறை எம்.பி.யாக இருந்து வருகிறார். மம்தாவிற்கும் ஆதிருக்கும் இடையிலான உறவுகள் எப்போதும் துருவங்களாகவே இருந்திருக்கின்றன.
மம்தா, ஆதிர் ரஞ்சன் இருவரும் காங்கிரஸில் இருந்தபோதிலிருந்தே அவர்களை அறிந்த மூத்த காங்கிரஸ் தலைவர்கள் இதுகுறித்து ஆங்கில ஊடகங்களிடம் பேசியபோது,
“மம்தாவும், ஆதிர் ரஞ்சனும் எப்போதும் இணக்கமாக இருந்ததே இல்லை. 1990களின் பிற்பகுதியில் அப்போதைய மேற்கு வங்காள மாநில காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ராவிற்கு எதிராக மம்தா கிளர்ச்சி செய்தபோது, ஆதிர் ரஞ்சன்தான் மம்தாவுக்கு எதிரானவர்களை ஒருங்கிணைத்தார். இருவரும் அப்போது ஒருவரை ஒருவர் மிஞ்சும் வகையில் வளர்ந்து வந்ததால், ஆதிர் ரஞ்சனுக்கு மம்தாவுக்கும் தொடக்கத்திலேயே ஒத்துப் போகவில்லை.
அப்போது மூத்த காங்கிரஸ் தலைவர் பிரிய ரஞ்சன் தாஸ் முன்ஷி உள்ளிட்டோருடன் சேர்ந்து மாநில காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ராவை ஆதரித்தார் ஆதிர் .
ஆனால் யாரை எதிர்த்து மம்தா தனிக்கட்சி கண்டாரோ அந்த சோமன் மித்ரா பிற்பாடு மம்தாவின் திரிணமூல் காங்கிரசில் இணைந்து எம்பி. ஆனார். ஆனால் அன்று தொடங்கிய மம்தா எதிர்ப்பு ஆதிர் ரஞ்சன் சௌத்ரியிடம் இன்றும் இருக்கிறது. வெளிப்படையாக மம்தாவை கடுமையான வார்த்தைகளில் தாக்குவதை ஆதிர் ரஞ்சன் தொடர்ச்சியாக செய்துகொண்டிருக்கிறார்.
மம்தா-காங்கிரஸ் கூட்டணி மேற்கு வங்காளத்துக்கு புதிதல்ல, ஏற்கனவே 2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இடது சாரிகளின் 34 வருட ஆட்சியை வீழ்த்தி மம்தா ஆட்சிக்கு வருவதற்கு காங்கிரஸ் துணையாக இருந்தது. இன்னும் சொல்லப் போனால் அப்போது மம்தாவின் அமைச்சரவையில் காங்கிரஸ் அமைச்சர்கள் இருந்தார்கள். அப்படி இருந்த காங்கிரஸ் அமைச்சர் மனோஜ் சக்கரவர்த்தி 2012 ஆம் ஆண்டில் ராஜினாமா செய்தார். முதல்வர் மம்தாவுக்கு எதிராக வெடித்தார். அப்போதே மம்தா-காங்கிரஸ் கூட்டணி முடிக்கு வந்துவிட்டது. அந்த மனோஜ் சக்கரவர்த்தி யார் என்றால் ஆதிர் ரஞ்சன் சௌத்ரிக்கு நெருக்கமானவர். ஆதிர் சொல்லிதான் அவர் அமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.
2016 சட்டமன்றத் தேர்தலில் மம்தா எதிர்ப்புப் போக்கின் உச்சகட்டமாக ஆதிர் எடுத்த அரசியல் முடிவுதான் இடதுசாரிகளுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்தது. மேற்கு வங்காளம் அதுவரை பார்த்திராத இடதுசாரிகள்- காங்கிரஸ் கூட்டணிக்கு முக்கிய காரணமாக இருந்தார் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி. காரணம் மம்தா எதிர்ப்பு மட்டும்தான்” என்கிறார்கள்.
இங்கே எப்படி பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை இருந்தால் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று அதிமுக தொடர்ந்து பாஜக தலைமையை எச்சரித்ததோ…அதேபோல, ஆதிர் காங்கிரஸ் மாநிலத் தலைவராக நீடித்தால், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், காங்கிரஸும் ஒருபோதும் மேற்கு வங்காளத்தில் கூட்டணிக் கட்சிகளாக மாற முடியாது’ என்று காங்கிரஸ் மேலிடத்துக்கு மம்தா பல முறை தெரியப்படுத்தினார்.
திரிணமூல் காங்கிரஸுடன் கடுமை காட்டாத பிரதீப் பட்டாச்சாரியா, அப்துல் மன்னான் போன்றவர்களை மாநில தலைவராக நியமித்தால் காங்கிரஸுடன் உறவு பாராட்ட ஏதுவாக இருக்கும் என்றும் காங்கிரஸ் தலைமைக்கு மம்தா தகவல்களை அனுப்பினார்.
ஆனால் காங்கிரஸ் மேலிடம் அதுபற்றி கவலைப்படாமல் ஆதிர் ரஞ்சன் சௌத்ரியை தொடர்ந்து மாநில காங்கிரஸ் தலைவராக அனுமதித்தது மட்டுமல்ல… அவர் மம்தாவுக்கு எதிராக அவ்வப்போது கடும் தாக்குதல் நடத்துவதையும் கண்டுகொள்ளவில்லை. மம்தா டெல்லியில் சோனியாவை பார்த்துவிட்டு கொல்கத்தா வருவார். அவர் கொல்கத்தா வருவதற்குல் அதிர் ரஞ்சன் மம்தாவை பற்றி கடுமையான வார்த்தைகளில் பத்திரிகையாளர்களிடம் பேசுவார். இப்போதைய நிலையில் மேற்கு வங்காளத்தில் திரிணமூல் காங்கிரஸ் -காங்கிரஸ் கூட்டணி அமையாமல் போனதற்கு முக்கியமான காரணம் ஆதிர் ரஞ்சன் தான் என்கிறார்கள் மேற்கு வங்க அரசியல் வட்டாரங்களில்.
காங்கிரஸ் வட்டாரங்களில் பேசியபோது, “காங்கிரஸ் கட்சியின் மேற்கு வங்காள மாநில தலைவராக ஆதிர் ரஞ்சன் 2014 முதல் இருந்துவந்தார். மம்தா பானர்ஜியின் விருப்பத்துக்காக 2018 ஆம் ஆண்டு அவருக்கு இணக்கமாக இருக்கும் சோமன் மித்ரா காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால் அப்போதும் கூட மம்தாவின் நிலையில் மாற்றம் ஏற்படவில்லை. பின் மீண்டும் 2020 இல் ஆதிர் ரஞ்சனே தலைவராக ஆக்கப்பட்டார். மம்தாவின் இந்த முடிவுக்கு காரணம், அவருக்கு பிரதமர் பதவி மீது இருக்கும் ஆசைதான். காங்கிரஸுக்கு இரண்டே இரண்டு சீட்கள் மட்டுமே தருவது என்பது எப்படி சரியானதாகும்?” என்கிறார்கள்.
சில நாட்களுக்கு முன் மக்களவைத் தேர்தல் குறித்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை மம்தா தனது கட்சி நிர்வாகிகளுடன் நடத்தினார். அப்போது அவர் சொன்ன வார்த்தை, “காங்கிரஸின் மற்ற வேட்பாளர்கள் கூட சில இடங்களில் ஜெயித்தால் கூட நமக்கு பிரச்சினை இல்லை. ஆனால் இம்முறை ஆதிர் நாடாளுமன்றம் செல்லக் கூடாது’ என்பதுதான்.
இப்படி மேற்கு வங்காள மாநிலத்தின் மம்தாவுக்கும்-ஆதிர் ரஞ்சனுக்கும் இருக்கும் தனிப்பட்ட ஈகோ இந்தியா கூட்டணியில் நாடு முழுதுமான பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் பல மாநிலங்களில் காங்கிரஸுக்கு எதிரான நிலையை மாநிலக் கட்சிகள் மேற்கொள்வதற்கும் இது ஏதுவாக இருக்கிறது. தமிழ்நாட்டில் கூட எதிரொலிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறுகிறார்கள் திமுகவினரே.
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹிந்தியில் ஜோதிகா ரீ-என்ட்ரி… திகில் பறக்கும் ’சைத்தான்’ டீசர்!
ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் தடுத்து நிறுத்தம்: பயணிகள் அவதி!
India alliance Mamata decision background