டிஜிட்டல் திண்ணை: அதிமுகவை நோக்கி ஆதவ் அர்ஜுனா

Published On:

| By Aara

வைஃபை  ஆன் செய்ததும் சர்ச்சை நாயகன் ஆதவ் அர்ஜுனா, வெளியிட்ட லேட்டஸ்ட் அறிக்கை இன்பாக்ஸில் வந்து விழுந்தது.

“அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் இன்று டிசம்பர் 15 ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடந்து முடிந்த சில மணி நேரங்களில்… விசிகவிலிருந்து ஏற்கனவே ஆறு மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆதவ் அர்ஜுனா ஒரு முக்கியமான அறிக்கையை வெளியிட்டார்.

விசிகவில் இருந்து என்னை முழுமையாக விடுவித்துக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, ‘வருகிற 2026 சட்டமன்ற தேர்தலுக்கு மக்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்  விரும்புகிற,  எதிர்பார்க்கிற கூட்டணி அமையும்.

என்னடா இவரு 2024 தேர்தலின் போதும் இப்படித்தானே சொன்னார் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், இப்போது சொல்கிறேன்…  வருகிற  சட்டமன்றத் தேர்தல் நமக்கான தேர்தல். நீங்கள் எதிர்பார்க்கிற மக்கள் எதிர்பார்க்கிற பிரம்மாண்டமான கூட்டணி உறுதியாக அமையும்.

அதன் பிறகு ஜனவரி மாதம் 234 தொகுதிகளுக்கும் நான் சூறாவளி சுற்றுப்பயணம் வர இருக்கிறேன். அதிமுக வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்’என்று நம்பிக்கையோடு உரையாற்றினார்.

எடப்பாடி பழனிசாமியின் இந்த நம்பிக்கை உரைக்கும், ஆதவ்  அர்ஜுனா தன்னை விசிகவிலிருந்து முழுமையாக விடுவித்துக் கொண்டதற்கும் தொடர்பு இருக்கிறது என்கிறார்கள் அரசியல் வட்டாரங்களில்.

ஆதவ் அர்ஜுனா அரசியல் வரம்புகளை தாண்டி அனைத்து கட்சியில் உள்ளவர்களோடும் நல்ல தொடர்பில் இருக்கிறார். பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணியோடும் அவருக்கு நல்ல உறவு உண்டு.

அதேபோல அதிமுக முன்னாள் அமைச்சர் புதுக்கோட்டை விஜயபாஸ்கர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மகன் மிதுன் உள்ளிட்டோருடன் தொடர்ந்து அவர் தொடர்பில் தான் இருக்கிறார்.

இந்த சூழலில்… ‘2021 சட்டமன்ற தேர்தலில் திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது பிரசாந்த் கிஷோரை வரவழைத்து  வெற்றி வியூகங்களை அமைத்து திமுகவை நான் ஆளுங்கட்சியாக மாற்றினேன். அதேபோல இப்போது அதிமுகவுக்காக தேர்தல் பணியாற்ற நான் பிரசாந்த் கிஷோரை அழைத்து வருகிறேன்.

நான் வகுக்கும் வியூகங்கள் மூலம் திமுக கூட்டணியில் இருந்தே சில கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வரும்’  என்று ஆதவ் அர்ஜுனா அதிமுக தரப்பிடம் முழுமையாக பேசி ஒப்புதல் பெற்றுவிட்டார்.

தன்னுடைய ஆலோசனையை ஏற்ற எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுக்குழுவில் பேசி முடித்த பிறகு சில மணி நேரங்களில் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் ஆதவ் அர்ஜுனா.

இதற்கிடையில் ஒரிரு நாட்களுக்கு முன் ஆதவ் அர்ஜுனா தொலைக்காட்சிகளுக்கு அளித்த பேட்டியில், ‘திமுகதான் என்னை விசிகவில் இருந்து நீக்குமாறு திருமாவளவனுக்கு முழுமையாக அழுத்தம் கொடுத்தது. இதை உணர்ந்து என்னை துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விடுவித்துவிடுங்கள் என்று சில மாதம் முன்பே நான் திருமாவளவனிடம் தெரிவித்தேன். அவர்தான் என்னை பதவியில் தொடர் அனுமதித்தார்’ என்று தெரிவித்திருந்தார்.

இதைப் பார்த்து டென்ஷனான திருமாவளவன், ‘கட்சிக்குள் கொடுக்க வேண்டிய விளக்கத்தை எல்லாம் வெளியே சொல்லிக் கொண்டிருக்கிறார்.  இவர் திருந்த மாட்டார். இடை நீக்கத்தை ரத்து செய்து, அவரை நிரந்தரமாக நீக்கம் செய்ய முடிவெடுத்தார். அதை அறிந்துகொண்டுதான் ஆதவ் அர்ஜுனா, ‘விசிகவில் இருந்து விலகும் முடிவை’ அறிவித்தார் என்கிறார்கள் விசிக வட்டாரங்களில்.

டிசம்பர் 15 ஆம் தேதியோடு கார்த்திகை மாதம் முடிந்து, டிசம்பர் 16 முதல் மார்கழி தொடங்குகிறது. எனவே தை பிறந்ததும் ஆதவ் அர்ஜுனா மூலமாக அதிமுகவில் தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருடன் முறைப்படி ஒப்பந்தம் செய்யப்படும் என்றும், மேலும் ஆதவ் அர்ஜுனா அதிமுகவில் இணைந்து ஐ.டி. விங் தொடர்பான திட்டமிடல் பணிகளை மேற்கொள்வார் என்றும் தகவல்கள் வருகின்றன” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அரசு ஊழியர்கள் இலங்கைக்கு நிவாரணம்!

ஹெல்த் ஹேமா: வறட்சியைத் தடுக்கும் பானங்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel