ஆதவ் நீக்கம்… யார் கொடுத்த அழுத்தம்? – ஸ்டாலினை சந்தித்த பின் திருமா பேட்டி!
”ஆதவ் அர்ஜூனாவுக்கு வாய்வழியாக தொடர்ந்து எச்சரிக்கை கொடுத்திருக்கிறோம். அதை மீறி நடந்ததால் அவசர நடவடிக்கையாக இடைநீக்கம் செய்திருக்கிறோம்” என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கடந்த 6ஆம் தேதி அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா திமுகவை கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதனையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பலத்தரப்பில் இருந்தும் கேள்விகள் எழுந்தன.
இந்த நிலையில் ஆதவ் அர்ஜூனாவை கட்சியிலிருந்து ஆறுமாத காலத்துக்கு இடைநீக்கம் செய்வதாக திருமாவளவன் இன்று அறிவித்தார்.
மேலும் கட்சியின் நலன்களை முன்னிறுத்தி, கட்சித் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர்கள் ஆகிய மூவர் உள்ளடங்கிய தலைமை நிர்வாகக் குழுவில், ஆதவ் அர்ஜூனா மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது என்று விசிக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினை சென்னை தலைமை செயலகத்தில் திருமாவளவன் இன்று மதியம் சந்தித்தார். அப்போது ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியாக ரூ.10 லட்சத்தை விசிக சார்பில் திருமாவளவன் வழங்கினார்.
தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மலர் வெளியீட்டு விழாவில் திருமாவளவன் கலந்துகொண்டார்.
பலமுறை எச்சரிக்கை கொடுத்தோம்!
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், ”விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, அண்மை காலமாக பல்வேறு நிகழ்வுகளில் அல்லது சமூக ஊடகங்களில் தன்னுடைய கருத்துகளை பதிவிட்டதன் மூலம் கட்சியின் நன்மதிப்பிற்கும் நம்பகத் தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு சூழல் உருவானது.
அதுகுறித்து அவரிடம் தொடர்ச்சியாக அறிவுறுத்தல் செய்தோம். எனினும் அண்மை நிகழ்வில் அவரது பேச்சு கட்சியின் நன்மதிப்புக்கும் தலைமையின் நம்பகத் தன்மைக்கும் எதிராக அமைந்த சூழலில் தான் கட்சியின் மூத்த தலைவர்களுடன் கலந்தாய்வு செய்து 6 மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்திருக்கிறோம்.
இந்த 6 மாத காலத்தில் அவர் விளக்கம் தருவதற்கான நேரம் இருக்கிறது. பலமுறை அவருக்கு வாய்வழியாக எச்சரிக்கை கொடுத்திருக்கிறோம். அதை மீறி நடந்ததால் அவசர நடவடிக்கையாக இதனைச் செய்திருக்கிறோம்.
விஜய்யுடன் சர்ச்சையோ சிக்கலோ இல்லை!
இந்த விவகாரத்தில் திமுக தரப்பில் இருந்து எங்களுக்கு எந்த அழுத்தமும் நெருக்கடியும் இல்லை. அவர்கள் அதுபற்றி பேசவும் இல்லை. விஜய் கலந்துகொண்ட விழாவில் நான் பங்கேற்க முடியாது என எடுத்த முடிவு சுதந்திரமான முடிவு. விசிகவுக்கும் தவெகவுக்கும் எந்த மோதலும் இல்லை. விஜய்யுடன் சர்ச்சையோ சிக்கலோ ஏற்பட்டது இல்லை.
ஆனால் அவருடன் ஒரே மேடையில் பங்கேற்கும்போது எங்களது கொள்கை பகைவர்கள், எங்களது வளர்ச்சியை விரும்பாதவர்கள், எங்களை வீழ்த்த வேண்டும் என்று விரும்புபவர்கள் அதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி எங்களுக்கு எதிராக கதை கட்டுவதற்கு வாய்ப்பு இருப்பதால் முன் உணர்ந்து எங்கள் நலனை கருத்தில் கொண்டு நாங்கள் எடுத்த முடிவு. அவரோடு நிற்பதை வேறெந்த கோணத்திலும் நாங்கள் தவறாக அணுகவில்லை.
எனவே நீங்கள் அவரை வைத்தே புத்தகத்தை வெளியிடலாம் என்று குறிப்பிட்ட பதிப்பக்கத்தாருக்கும் முன் கூட்டியே தெரிவித்துவிட்டோம்.
மாற்றுக் கட்சியினர் ஒரே மேடையை பகிந்துகொள்ளலாம். ஆனால் தமிழ்நாட்டில் அந்தமாதிரியான ஆரோக்கியமான ஒரு சூழல் இல்லை. எல்லாவற்றையும் திசை திருப்புவது, மடைமாற்றம் செய்வது உள்ளிட்ட வேலைகளை செய்கிற போது நாங்கள் கவனமாக இருக்க வேண்டியது முக்கியமாகிறது.
அரசியல் பேச வேண்டாம் என்று கூறினேன்!
நூல் வெளியீட்டு விழாவிற்கு முன்னதாக ஆதவ் அர்ஜூனா என்னிடத்தில் பேசினார். அப்போது, ’நூல் உருவாக்கியதில் உங்களுக்கு பங்கு இருக்கிறது. அதில் நீங்கள் பங்கேற்க கூடாது என்று நான் சொல்லமாட்டேன். அது ஜனநாயகமில்லை. நீங்கள் தாராளமாக இந்த விழாவில் கலந்துகொள்ளுங்கள்.
ஆனால் அதேவேளையில் அரசியல் பேச வேண்டாம். அம்பேத்கர் பற்றி பேசுங்கள், நூலின் பின்னணி பற்றி பேசுங்கள்’ என்று வழிகாட்டுதல்களைக் கூறினேன்.
ஆனால் அவர் பேசிய பேச்சு பல்வேறு சர்ச்சைகளுக்கு இடம் கொடுத்தது. விசிகவின் நம்பகத் தன்மையை நொறுக்கும் அளவுக்கு அமைந்துவிட்டது.
ஆகவே கட்சியின் நன்மதிப்புக்கும் தலைமையின் நம்பகத் தன்மைக்கும் எதிராக அமைந்த சூழலில் தான் கட்சியின் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் கலந்தாய்வு செய்து 6 மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்திருக்கிறோம்” என்று திருமாவளவன் பேசினார்.
முதலில் அண்ணாமலை சொல்லட்டும்?
விசிக திருமாவளவன் கட்டுப்பாட்டில் இருக்கிறதா அல்லது ஆதவ் அர்ஜுனா கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்பதை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு, “பாஜக அதானி கட்டுப்பாட்டில் இருக்கிறதா அல்லது மோடி கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்பதை அவர் முதலில் சொல்லட்டும். அதன்பிறகு நான் பதிலளிக்கிறேன்” என்று திருமாவளவன் தெரிவித்தார்.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அப்படியெல்லாம் வர முடியாது: இளையராஜா
அண்ணாமலை Vs ஆர்.எஸ்.பாரதி: தீவிரமாகும் மோதல்!